

தன் மனதுக்கு மகிழ்ச்சி தருகிற கலையையே தன் அடையாளமாக மாற்றியிருக்கிறார் கோயம்புத்தூர் ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி. மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் வேலையைச் செய்து கொண்டிருந்தவர், குழந்தைப்பேறு காரணமாக வேலையைத் துறக்க வேண்டிய சூழ்நிலை. குழந்தை ஓரளவு வளர்ந்ததும் மீண்டும் இயந்திரத்தனமாக வேலைக்குப் போக புவனேஸ்வரி விரும்பவில்லை. என்ன செய்தார்?
“எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு வட இந்தியப் பெண்மணி இருந்தாங்க. கைவினைக் கலைகளில் அவங்க கைதேர்ந்தவங்க. அவங்க செய்யற கலைப்பொருட்களைப் பார்த்ததும் எனக்குள் உறங்கிக் கிடந்த கலையார்வம் மெல்லத் துளிர்விட்டுச்சு. ஏதாவது ஒரு கலையை நல்லவிதமாகக் கத்துக்கிட்டா போதும்னு நினைச்சு, ஆரத்தித் தட்டுக்களோட அடிப்படையை மட்டும் அவங்கக்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.
ஊருக்கு நாலு பேர் ஆரத்தித் தட்டு செய்யறாங்க. அதுல நாம எப்படி நம்மை தனியா அடையாளம் காட்ட முடியும்ங்கற கேள்வி எனக்கு சவாலா அமைஞ்சது. பொதுவா எல்லாரும் சீர்வரிசைத் தட்டுகளில் பொருட்களையும், பழங்களையும் அவங்களே செய்து அலங்கரிப்பாங்க. அப்படி செய்யறதைவிட உண்மையான சீர்வரிசைப் பொருட்களையே அழகுபடுத்தி வைக்கலாம்னு தோணுச்சு. அந்த நேரம் பார்த்து என் அக்கா மகளுக்குத் திருமணம் கைகூடி வந்தது. அதுக்கு சீர்வரிசை வைப்பதில் நம் திறமையைக் காட்டுவோம்னு களத்தில் இறங்கினேன். என் அப்பா, அம்மா, கணவர் மூணு பேரும் அதுக்கு உதவினாங்க. என்னோட முதல் முயற்சிக்கே நல்ல வரவேற்பு கிடைச்சுது” என்று சொல்லும் புவனேஸ்வரிக்கு, அதற்குப் பிறகு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
நேர்த்தியால் கிடைக்கும் பாராட்டு
“கல்யாணத்துல நாங்க வைக்கிற சீர்வரிசையைப் பார்க்கிறவங்க பலர் எங்களைத் தேடி வந்து ஆர்டர் கொடுத்திருக்காங்க. வெளியூர் வாடிக்கையாளர்களும் இதில் அடக்கம். ஆர்டர் கொடுக்கறவங்களோட ஆலோசனையையும் கேட்டு அதையும் செயல்படுத்துவோம். சீர்வரிசைத் தட்டுகள் தவிர தாம்பூலப் பைகள், பரிசுப் பெட்டிகள், குடை அலங்காரம்னு திருமணத்தோட தொடர்புடைய அனைத்து அலங்கார வேலைகளையும் செய்வோம். ஒரு முறை மாட்டு வண்டி போல சீர்வரிசை தட்டு செய்து, அதில் திருமணப் புடவையை வைத்தோம். பலருக்கும் அது பிடித்துப் போக அந்த மாட்டு வண்டிக்காகவே கிட்டத்தட்ட நூறு ஆர்டர்களுக்கு மேல் வந்தது” என்கிறார் புவனேஸ்வரி.
திருமணம் தொடர்புடைய தொழில் என்பதால் முகூர்த்தங்களுக்கு ஏற்ப வருமானமும் வருவதாகச் சொல்கிறார்.
“ஆடி, மார்கழி மாதங்களில் அவ்வளவாக ஆர்டர் இருக்காது. முகூர்த்த மாதங்களில் தொடர்ந்து வேலை இருக்கும். கையைக் கடிக்காத வகையில் வருமானம் வருகிறது. வருமானத்தைவிட என் வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டே என்னை இன்னும் நேர்த்தியுடன் இயங்க வைக்கிறது” என்கிறார் புவனேஸ்வரி.