

ஆனந்தினி: தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்
சென்னை தரமணியிலிருக்கும் ராமானுஜன் தகவல்தொழில்நுட்பப் பூங்கா வளாகத்திலிருக்கும் வங்கி ஒன்றில் பொறுப்பான பதவியில் இருக்கிறேன். இதற்கு முன் பணிபுரிந்த இடத்தில் திருநங்கை என்பதாலேயே அங்கிருப்பவர்கள் என்னை மிகவும் மோசமாக நடத்தினர். கேலி, கிண்டலைத் தாண்டி மோசமாக ‘வெர்பல் அப்யூஸ்’ செய்தனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். திருநங்கை களுக்கு உதவும் ‘சகோதரன்’ போன்ற அமைப்பினர்தான் இதிலிருந்து என்னை மீட்டனர். தற்போது என்னுடைய சுய அடையாளத்தோடு திரு நங்கையாகவே பணிபுரிகிறேன். என்னை மிகவும் அன்பாகவும் கௌரவமாகவும் இந்த இடத்தில் நடத்துகின்றனர்.
பல பன்னாட்டு நிறுவனங்கள் பால் சமநிலைக் கொள்கையைக் கொண் டிருக்கின்றன. ஆண், பெண், திருநங்கை போன்றோரைச் சமமாக நடத்துகின்றன. அதில் எங்கள் நிறுவனமும் ஒன்று. சில நிறுவனங்கள் தங்களின் ஊழியரின் பால் மாற்று அறுவைசிகிச்சைக்கும் உதவுகின்றன. புதிதாகப் பணியில் சேரும் பெரும்பாலான திருநர்கள் ஆண் உடையில்தான் இருப்பார்கள். அவர்களிடம் இயல்பாக வெளிப்படும் தன்மைகளைக் கொண்டு அவர்களைக் கேலி, கிண்டல் செய்யாமல் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். நிறுவனங்களிலும் பொது இடங்களிலும் பால் சமநிலைக் கழிவறைகளை அமைக்க வேண்டும். ஆண் உடையில் பெண் தன்மையில் இருப்பவரால் பெண்களுக்கான கழிவறையைப் பயன்படுத்த முடியாது. பெண் உடலோடு ஆண் தன்மையோடு இருக்கும் திருநம்பியால் ஆண்களுக்கான கழிவறையைப் பயன்படுத்த முடியாது. இது ஒரு முக்கியமான பிரச்சினை. தனியாரும் அரசும் சேர்ந்துதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், திருநர் மக்கள் தங்களுக்கான பாதுகாப்பான பணியை எதிர்பார்க்கும் அதேநேரத்தில், அதற்கான தகுதியையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பூங்குழலி: நாங்கள் எளிய இலக்கு அல்ல
பன்னாட்டு நிறுவனமான அசென்ஜரில் சீனியர் பிசினஸ் அனலிஸ்டாகப் பணிபுரிகிறேன். எனக்கு இரண்டு அக்கா, ஒரு அண்ணன். சைதாப் பேட்டையில்தான் வசித்தேன். எங்கள் தந்தை குடும்பத்திலிருந்து விலகிவிட, பூ கட்டிக் கொடுத்து எங்களைக் கரையேற்றினார் அம்மா. நான் வேலைக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து அவரை நான் பார்த்துக்கொள்கிறேன். ஒன்பதாவது படித்தபோது எனக்குள் பெண்மையை உணரத் தொடங்கினேன். பதினொன்றாவது படித்தபோது எனது பாலீர்ப்பு ஆணின் மீதுதான் என்பதைப் புரிந்துகொண்டேன். எனக்குப் பொருந்தாத ஆண் சட்டையை நான் கழற்றி எறிய வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையைக் கூறி என்னை வழிநடத்தியவர் திருநங்கை கல்கி சுப்பிரமணியம்.
நன்றாகப் படிப்பதுதான் என்னுடைய இலக்கை அடைய ஒரே வழி என்று புரிந்தது. பன்னிரண்டாம் வகுப்பில் 1070 மதிப்பெண்கள் எடுத்தேன். வேளச்சேரி குருநானக் கல்லூரியில் பி.காம்., பட்டத்தில் டிஸ்டிங்ஷன் பெற்றுத் தேர்வானேன். வளாக நேர்காணலிலேயே டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். அங்கு நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தேன். அதன் பிறகு அசென்ஜரில் என்னுடைய திருநங்கை அடையாளத்தோடும் பெயரோடும் பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
சமூகம் ஒதுக்குகிறது, பள்ளியில் கிண்டல், கேலி செய்கிறார்கள் என்பதற்காக நாம் படிப்பதை நிறுத்தக் கூடாது. அத்தகைய கேலி, கிண்டலை, உடல்ரீதியான பாலியல் தொந்தரவுகளைக் கடந்துதான் நானும் படித்தேன். என்னுடைய குரல் இயல்பிலேயே பெண் தன்மையோடுதான் இருக்கும். அதனால் பள்ளி, கல்லூரி விழாக்கள், இப்போது கிடைக்கும் இசை மேடைகளில் திரையிசைப் பாடல்களைப் பாடுவதிலும் இசையை முறையாகக் கற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்துகிறேன்.
கேட்பதற்கு யார் வரப்போகிறார்கள் என்னும் தைரியத்துடன் திருநங்கைகளையும் திருநம்பிகளையும் எவரும் சீண்டலாம், கேலி செய்யலாம், அடித்துத் துன்புறுத்தலாம் என்று சமூகத்தில் பலரும் நினைக்கின்றனர். சமூகத்தில் எளிய இலக்காகத் திருநர் சமூகத்தினரை எண்ணும் போக்கை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எத்தனையோ நல்ல திட்டங்களை அரசு எங்களுக்கு அளித்திருக்கிறது. அரசு நினைத்தால் இந்த நிலையை மாற்றலாம்.
திஷா: பிரபஞ்ச அழகியாக வேண்டும்
மிஸ் கூவாகம் 2023 போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறேன். என்னைப் பெற்றெடுத்த அம்மா சூர்யகலா. பால் மாற்று அறுவைசிகிச்சைக்குப் பணம் கொடுத்தவர் என் அம்மாதான். எனக்கு இன்னொரு அம்மா நமீதா மாரிமுத்து. அவர்தான் என்னுடைய வழிகாட்டி. வேலூர் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி என்னும் அழகான ஊரில் பிறந்தேன். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து பெங்களூருவில் நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்தேன். ஆனால், அங்கே எனக்கென்று தங்குவதற்குத் தனி அறைகூட ஒதுக்கவில்லை. மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ்ஜென்டர் போட்டி தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. அதற் காகத் தயாராகிவருகிறேன். மாடலிங் துறையிலும் திரைப் படத்திலும் நடனத் துறையிலும் பிரகாசிக்க வேண்டும். அதற்கான ஒரு துருப்புச் சீட்டாகத்தான் உலகளாவிய அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கெடுக்க இருக்கிறேன். இதற்கான போட்டியில் என்னைத் தேர்ந்தெடுக்க எனக்கு உங்களின் ஆதரவை இந்த இணைப்பில் (https://shorturl.at/ertT8) அளியுங்கள். இந்தப் புகழைக் கொண்டு பசியைப் போக்குவதற்கான செயலில் நேரடியாக ஈடுபடவிருக்கிறேன்.