

காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுவது மட்டுமல்ல. காதலுக்குச் சாதி, மதம், பொருளாதார நிலை போன்றவை எப்படித் தடையில்லையோ அதேபோலப் பாலினமும் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளனர் அருண் - அருணா தம்பதி.
அருண் ஃபைஸ் (25) விருதுநகரைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி. பெண்ணாக இருந்தபோது அருணா தேவி என்கிற பெயருடன் இருந்தவர், பள்ளிப் பருவத்தில் தனக்குள் இருந்த ஆண் தன்மையை உணர்ந்திருக்கிறார். பிறகு கல்லூரி நாள்களில் திருநம்பியாக வெளிப்பட்டுத் தன் பெயரை அருண் ஃபைஸ் என மாற்றிக்கொண்டார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அருணா தேவி (24) பி.காம்., பட்டதாரி. அருணா தன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அருணின் அறிமுகம் கிடைத்தது. நட்பு காதலாகக் கனிய, பல்வேறு எதிர்ப்புகளையும் தடைகளையும் வென்று இந்த ஆண்டு காதலர் தினத்தன்று இவர்கள் கரம் பிடித்தார்கள். இருவருமே பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் என்பதால் இவர்களது திருமணம் சுயமரியாதை முறைப்படி நடந்தது. திருமண ஒளிப்படம் வெளியானதும் மிரட்டல், அச்சுறுத்தல், நிராகரிப்பு எனப் பல்வேறு வகையிலும் இவர்களுக்கு எதிர்ப்பு வலுத்தது. தங்களுக்குப் பாதுகாப்பான இடம்கூட இல்லாத நிலையிலும் அருண் - அருணா இவருவரும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையைக் கைவிடாமல் இருக்கின்றனர்.
- நவீன், பயிற்சி இதழாளர்.