என்றென்றைக்கும் நான் திருநங்கைகளின் தோழிதான்!

என்றென்றைக்கும் நான் திருநங்கைகளின் தோழிதான்!
Updated on
2 min read

திருநங்கைகளில் பலரும் ஆண் அடையாளத்துடன் பணியில் சேர்ந்திருப்பார்கள். அதன் பிறகுதான் அவர்களுக்குப் பால் மாற்றுச் சிகிச்சை செய்துகொள்வார்கள். இதுபோன்ற நேரத்தில் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வது பெரும் மன உளைச்சலைத் திருநர் மக்களிடம் ஏற்படுத்தும். அப்படி உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கு உரிய மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுத் தருவது முதல் அவர்களின் உற்ற தோழியாகச் செயல்படுபவர் சுஜாதா.

தமிழகத்தைச் சேர்ந்த எண்ணற்ற திருநங்கைகளுக்கு அவர்களின் புதிய பெயர்களுடன் பாலின அறுவைச்சிகிச்சை நடந்ததற்கான சான்றிதழ், அரசு வழங்கும் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட இதர ஆவணங்களில் உரிய பெயர் மாற்றத்தைப் பெற்றுத் தந்திருப்பவர். திருநங்கைகளுக்கான கல்வித் தகுதிக்கு உரிய சம்பளத்துடன் கூடிய பணியை அவர்களுக்குப் பெற்றுத் தருபவர் என்னும் நற்பெயரும் எடுத்திருப்பவர் சுஜாதா. அவரிடம் பேசியதிலிருந்து...

மனதுக்கு ஆறுதல்

“நானும் ஆண் உடையில் பணிபுரிந்தபோது கேலி, கிண்டல், சீண்டல்களை எதிர்கொண்டேன். அதன் பிறகுதான் திருநர் மக்களுடன் இணைந்து பணிபுரிய ஆரம்பித்தேன். கடந்த 15 ஆண்டுகளாகத் திருநர் மக்களின் நலனுக்காகச் செயல்பட்டுவருகிறேன்.

திருநர் மக்களின் உடல் நலன், மன நலன், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காகத் திருநர் சமூக நலத் தன்னார்வ அமைப்புகள் பலவற்றிலும் பணிபுரிந்திருக்கிறேன். பால்மாற்று அறுவைச்சிகிச்சையை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கும் திருநங்கைகளை ‘தோழி’ அமைப்பு சார்பில் ஆற்றுப்படுத்துவது, சான்றிதழ்களில் அவர்களின் பெயர் மாற்றம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பது, மாற்றத்துக்கு உட்படும் திருநங்கைகளின் உடல், மன நலப் பிரச்சினைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது போன்றவற்றைச் செய்தேன். இப்போதும் செய்துவருகிறேன். இதில் என் மனதுக்கும் ஆறுதல் கிடைக்கும். ஏறக்குறைய 250 திருநர் மக்களுக்கு அரசு தரும் வீடுகள் கிடைப்பதற்கான பணியைச் செய்திருக்கிறேன். தற்போது ‘சென்னை போட்டோ பியனேல்’ என்னும் தனியார் நிறுவனத்தில் சமூக ஊடகப் பிரிவில் மனிதவள மேம்பாட்டாளராகப் பணிபுரிகிறேன்.

புரிதலைத் தீவிரமாக்குவோம்

அரசால் நலத்திட்ட உதவிகளைத் தரமுடியும். ஆனால், குடும்பத்தில் இருப்பவர்களும் உறவினர்களும் நண்பர்களும் திருநர்களை ஏற்றுக்கொள்வதற்குச் சமூகத்தில் திருநர் குறித்த புரிதலை இன்னும் தீவிரமாகக் கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் இதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். என்னுடைய குடும்பம் என்னை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. விடாமுயற்சி இருந்தால் எவராலும் சாதிக்க முடியும். அதை நோக்கிப் பயணிப்போம்”.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in