கிராமத்து அத்தியாயம் - 20: எலிமுழுங்கி
வையாபுரிக்குப் புதிதாகக் கல்யாணமாகியிருந்தது. அவன் மாமியார் வீட்டில் மாப்பிள்ளை விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் வீட்டுக்குப் புதுமாப்பிள்ளையாக வந்தவனுக்கு மூன்று மாதத்துக்கு நெல்லுச் சோறாக விருந்து சாப்பாடு போட வேண்டும்.
வையாபுரி தன் அண்ணன் மகன் என்பதால் அவன் மாமியாரான சின்னத்தாயி அவனுக்கு ஆசை ஆசையாக ஒரு சிவப்புக் கல் வைத்த ஒரு கடுக்கனை வாங்கிப் போட்டிருந்தாள். வையாபுரியும் அந்தக் கடுக்கனைக் கல்யாணத்தன்றே காதில் போட்டிருந்தான். அவனுடைய மச்சினனான பரசுவுக்கு அந்தக் கடுக்கனைப் பார்க்க ஆசையாக இருந்தது. அந்த மாதிரி தானும் ஒரு கடுக்கன் போடவேண்டுமென்று ஏங்கித் தவித்தான். ஆனால், அதற்குண்டான வசதி இல்லை என்பதால் வையாபுரியின் காதிலிருக்கும் கடுக்கனையே பார்த்துப் பார்த்து ஏங்கிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.
ஒருநாள் இருவரும் நடுவைக்கான ஈர வயலில் வரப்புச் சாத்துவதற்காகப் போனார்கள். வையாபுரி ஈர வரப்பை வெட்டியெறியும்போது ஒரு எலி கண்திறக்காத தன் ஏழு குட்டிகளோடு வயல் தண்ணீரில் அங்கும் இங்கும் ஓட முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது. உடனே வையாபுரி மச்சினனான பரசுவிடம் கேலியாக, “மச்சினரே பொழுது உச்சிக்கு வந்துருச்சி. இம்புட்டு நேரம் வரப்புச் சாத்தினதில நீரு வவுத்துப் பசியோட இருப்பீரு. மேற்க பொழுது சாஞ்சப் பெறவுதான கஞ்சி குடிக்கப்போறோம். அதனால, இப்போதைக்கு உம்ம வவுத்துப் பசியைத் தாங்க இந்த ஏழு எலிக்குட்டிகளை எடுத்து முழுங்கி உம்ம வவுத்துப் பசிய தீத்துக்கோரும்” என்றான்.
அப்படி வையாபுரி சொன்ன உடனே பரசுவுக்கு வேகம் வந்துவிட்டது. “சரி. நானு ஏழு எலிக்குட்டியவும் எடுத்து முழுங்கிருதேன். நீரு எனக்கு என்ன தருவீரு?” என்று கேட்டான். உடனே வையாபுரி நம்ம மச்சினன்கிட்ட கேலிக்குத்தே(ன்) சொன்னோம், இவன் நம்மகிட்ட பந்தயமில்ல போடுதான் என்று நினைத்தவன் இந்த எலிக்குட்டிய யாராவது விழுங்குவார்களா என்று விளையாட்டாக எண்ணியவன், “நீரு இந்த ஏழு எலிக்குட்டிகளை முழுங்கிட்டீருன்னா நீரு என்ன கேட்டாலும் நானு தாரேன்” என்றான்.
பரசுவும், “வார்த்தை மாறமாட்டீரே” என்று கண்டிப்போடு கேக்க, “நிச்சயமா வார்த்தை மாற மாட்டேன்” என்று வையாபுரி சொல்லி முடிக்கும் முன்பே பரசு தன் வலது கையை நீட்டினான். “வார்த்தை மாற மாட்டேன்னு இந்தக் கையில் அடிச்சி சத்தியம் பண்ணும்” என்றதும் இவனென்ன இதுக்கெல்லாம் சத்தியம் கேட்கிறான் என்று குழம்பிய வையாபுரி, “சத்தியமா கொடுத்த வார்த்தைய மீற மாட்டேன்” என்று மச்சினனின் கையில் சத்தியம் செய்தான். இவன் சத்தியம் செய்ததுதான் தாமதம். பரசு, தன்ணீரில் இன்னமும் தத்தளித்துக்கொண்டிருந்த ஏழு எலிக்குட்டிகளையும் தூக்கி லவக்லவக்கென்று முழுங்கி ஏப்பமும் விட்டுவிட்டான்.
அதைப் பார்த்த அதிர்ச்சியில் கண் சிமிட்டாமல் நின்றிருந்த வையாபுரியிடம், “மாப்பிள்ள, நான் சொன்ன சொல்லைக் காப்பாத்திட்டேன். நீரு கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றும்” என்றான் பரசு. வையாபுரியும், “சரி உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க, “எனக்கு நீரு காதுல போட்டுருக்க கடுக்கன்தே(ன்) வேணும்” என்றான் பரசு. உடனே வையாபுரியும் தன் காதில் போட்டிருந்த கடுக்கனைக் கழற்றிக் கொடுத்தான். அதை வாங்கித் தன் காதில் ஆசையாகப் போட்டுக்கொண்டு வீட்டுக்குப்போன மகனை சின்னத்தாயி பார்த்துவிட்டு “புது மாப்பிள்ளைக்குப் போட்ட கடுக்கனை நீ எதுக்கு வாங்கிப் போட்டே?” என்று சண்டை போட்டாள். பரசு கடுக்கனை கழற்றிக் கொடுத்தானோ என்னமோ தெரியாது. ஆனால், அன்றைய தினத்திலிருந்துதான் அவர்கள் குடும்பத்துக்கு ‘எலிமுழுங்கிக் கூட்டம்’ என்ற பட்டபெயர் வந்தது.
(தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
