தினமும் மனதைக் கவனி - 20: தனியாக இருந்தாலும் துணிவோடு வாழலாம்

தினமும் மனதைக் கவனி - 20: தனியாக இருந்தாலும் துணிவோடு வாழலாம்
Updated on
2 min read

பெண்களின் வாழ்வைப் பற்றிப் பேசுகையில் மணமாகாத பெண்கள், இளம் வயதில் கணவனை இழந்தோர், குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் ஆகியோரது சவால்களைப் பற்றியும் அலச வேண்டாமா?

சில பெண்கள் முதுமை வரை மணம் முடிக்காமல் இருந்துவிடுகிறார்கள். இவர்கள் அந்த நிலையைத் தேர்ந்தெடுத் திருக்கலாம் அல்லது அந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். இளமையின் ஆசைகள், கனவுகள் இருந்தும் பல காரணங்களால் இந்த நிலை. சிலர் தம்பி, தங்கைகளைப் படிக்கவைக்கத் தன் படிப்பை நிறுத்திக்கொண்டு, வேலைக்குப் போக ஆரம்பித்து, அவர்கள் உயர்ந்துவிட்டபின் திருமணமும் செய்துவைப்பார்கள்.

மணமாகாத பெண்கள் தங்களுக்கென்று குடும்பம் இல்லாததால் கூடப் பிறந்தவர் குடும்பங்களோடு ஒன்றிப்போய்விடுவார்கள். இளம் வயதிலிருந்து அதிகாரம் உங்கள் கையில் இருந்திருக்கும். உங்களை நம்பியிருந்தவர்கள் சுதந்திரமானதும் உங்களை மீறிச் செயல்படுவது உங்கள் அமைதியைக் குலைக்கும்; திருமணமான பின் மீறல்கள் அதிகரிக்கும். உங்கள் எல்லையை மறந்து தலையிட்டால், உறவில் உரசல்கள் அதிகரித்து இடைவெளி கூடும். உங்களுக்கு உள்ள ஒரே உறவு அவர்கள் என்பதால் கசப்பை வளர்க்க வேண்டாமே. உங்களிடம் கேட்டால் கருத்தைச் சொல்லுங்கள்.

இதற்குள் அவர்கள் குடும்பங்கள் பெரிதாகும். குழந்தைகளோடு விளையாடி, சீராடி மகிழ்ச்சியில் இருப்பீர்கள். மெல்ல முதுமை எட்டிப் பார்க்கும். உடம்பு ஒத்துழைக்காது. ஆனால், அக்காவின் இயலாமையை மற்றவர் கண்டுகொள்வதில்லை. மருத்துவமனைக்குத் தனியேதான் போய் வருவீர்கள். டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்கக்கூட மறந்துவிடுவார்கள். தன் மனைவிக்கோ கணவனுக்கோ கூடவே நிற்கும் தம்பி, தங்கையைப் பார்க்கையில், ‘எனக்கென்று ஒருவர் இருந்திருந்தால்!’ என்று ஏக்கம் வரும். கண்களில் நீர் துளிர்க்கும். அன்று அத்தையை விட்டுப் பிரிய மாட்டேன் என்று அழுது ரகளை செய்த தம்பியின் குழந்தை இன்று அப்பா, அம்மவைத்தான் சுற்றுலாவுக்குக் கூட்டிச் செல்வான்! ‘நான் அவர்கள் குடும்பமில்லையா?’ என்று நெஞ்சு வலிக்கும். “பாசத்தால் நீ பாழாய்ப் போகிறாய்; தனியாக இரு” என்ற தோழிகளின் அறிவுரை பதற்றத்தை உண்டுபண்ணும்.

இதுவரை கூடப்பிறந்தவர் தேவைகளுக்கு முட்டுக்கொடுத்ததை உங்கள் உடல்நிலையைக் காரணம் காட்டி, நிறுத்த வேண்டும். “நான் படுத்துக்கிட்டா உங்களுக்குத்தானே கஷ்டம்” என்று மென்மையாக ‘ராஜதந்திரி’ போல் பேச வேண்டும்.

பொருளாதார வசதி இருந்தால், அவசியமான செலவுக்கு உதவலாம்; உங்கள் எதிர்காலத் தேவைகளுக்குச் சேமித்துவைத்ததில் கைவைக்க வேண்டாம்! சீட்டு கட்டுவது, வட்டிக்குக் கொடுப்பது இவற்றிலெல்லாம் அபாயம் அதிகம்; அந்தப் பக்கமே போக வேண்டாம்.

தள்ளி இருப்பதே நல்லது

குடும்பக் கடமைகள் முடிந்தபின், திருமணம் செய்துகொள்ள நினைத்தால், தவறில்லை; ஆனால், அதில் சில சிக்கல்கள் உண்டு. காதலித்தவரா, மணமாகாதவரா, மனைவியை இழந்தவரா, குழந்தைகள், ஆரோக்கியம், வசதி உள்ளவரா என்பன போன்ற விவரங்களைப் பொறுத்து அலசி, யோசித்து முடிவெடுக்க வேண்டும். இன்றெல்லாம் திருமணத்திற்கு வயது ஒரு தடை இல்லை!

உடன்பிறப்புக்கு மணம் முடித்தவுடன் அவர்களைத் தனியாக வைப்பது உறவுக்கு நல்லது. அதற்குள் உங்களுக்கென்று ஒரு சிறு வீடாவது வாங்கியிருந்தால் நீங்கள் கெட்டிக்காரர். இல்லையென்றால், பொருளாதார வசதி இருந்தால் உடல் தளர்ந்து போவதற்கு முன்பே ஒரு சிறு வாடகைக் குடியிருப்பில் வாழ முடிவெடுங்கள். பாசம் அந்தப் பக்கம் இழுக்கும்; முடிவை மாற்றிக்கொள்ள வேண்டாம். கடமைகள் முடிந்தாயிற்று. இனி உங்களைக் கவனியுங்கள். தியானம், மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி, ஆரோக்கிய உணவு, தோழிகளுடன் உறவாடுவது, சொற்பொழிவுகள் கேட்பது, பிடித்தமான பொழுதுபோக்கு, பொது நலத் தொண்டு இவற்றையெல்லாம் செய்யும்போது அமைதி, மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்தை உதறிவிட்டதாகக் நினைக்க வேண்டாம். இரு தரப்பினரது சுதந்திர வட்டங்களும் பாதுகாக்கப்பட்டால், உறவு ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் மீது மரியாதை கூடும். உடல்நிலை மோசமாகும்முன், சிலர் நல்ல முதியவர் சமூகத்தில் போய் சேர்ந்துவிடுகிறார்கள். குடும்பத்தார் பாசமானவர்களே! ஆனால், நீங்கள் படுத்துவிட்டால் பாரமாகத்தான் நினைப்பார்கள்; அதையும் மறக்க வேண்டாம்!

(மனம் திறப்போம்)

கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in