

எழுதப்படுகிற வரலாறெல் லாம் ஆண்களைப் பற்றியதாகவும் ஆண்களால் எழுதப்படுகிறவையாகவும் இருக்கிறபோது வரலாற்றை ஆய்வுசெய்யும் துறையிலாவது பெண்கள் தடம்பதிக்க வேண்டும். தொல்லியல் ஆய்வாளர் தீபிகாவும் அதைத்தான் வழிமொழிகிறார். அறிவியல், வரலாறு, தொல்லியல் போன்ற துறைகளும் பெண்களுக்கான துறைகளே என்பதைத் தன் கள ஆய்வுகள் மூலம் தீபிகா உணர்த்துகிறார்.
சென்னையைச் சேர்ந்த தீபிகாவுக்குச் சிறு வயதிலிருந்தே வரலாற்றில் ஆர்வம். பள்ளிக் கல்விக்குப் பிறகு தன் பெற்றோரது விருப்பப்படி இளங்கலை கணினி அறிவியல் படிப்பில் சேர்ந்தார். தனக்குப் பிடித்த தொல்லியல் படிப்பைத் தொடர்வதற்காகக் கணினிப் படிப்பைப் பாதியில் விட்டார். இவர் படித்தபோது தொல்லியல் துறைக்கான இளங்கலை படிப்பு தமிழகத்தில் இல்லை. அதனால், சென்னையில் முதுகலை வரலாறு படிப்பை முடித்துவிட்டு அறிவியல் சார்ந்த தொல்லியல் முதுகலைப் படிப்பை புனேவிலுள்ள டெக்கான் கல்லூரியில் முடித்தார்.
குப்பையல்ல, பொக்கிஷம்
புனேவில் இருந்த இரண்டு ஆண்டுகள் தீபிகாவுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமைந்தன. இந்தியா முழுவதிலும் இருந்து மாணவர்கள் அங்கே படித்ததையும் அங்கிருந்த பேராசிரியர்கள் தீபிகாவுக்கு உறுதுணையாக இருந்ததையும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார். குறிப்பாக ஆர்த்தி தேஷ்பாண்டே என்கிற பேராசிரியரின் துடிப்பான வகுப்புகளால், தன் ஆராய்ச்சியை மன்னார் வளைகுடாவில் சங்கு, முத்துக்குளியல் குறித்து நடத்தினார். இதற்காக, 2010இல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கையில் கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது கொற்கையில் கிணறு வெட்டி மண் குவிந்து கிடப்பதைப் பார்த்தவர் உற்சாகம் அடைந்தாராம். “தொல்லியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை குப்பை என்று எதையும் தவிர்க்க முடியாது. சொல்லப் போனால் குப்பையில் இருந்துதான் ஆய்வுக்குப் பயனுள்ள பல பொருள்கள் கிடைக்கும்” எனச் சொல்கிறார் தீபிகா. அந்த ஆய்வின்போது பழங்கால சங்கு வளையல் துண்டுகள் தீபிகாவுக்குக் கிடைத்துள்ளன. ஹரப்பா நாகரிகம் குறித்த ஆய்வின்போது இந்த வளையல் துண்டுகள் இவருக்கு உதவியாக இருந்தனவாம்.
சோழர் கால ஓவியங்களையும் இவர் ஆராய்ந்தி ருக்கிறார். “சோழ அரசர்கள் எளிமையான உடைகளைத்தான் அணிந்திருந்தார்கள். அரசிகளும்கூட ஆடம்பரமில்லாத வாழ்க்கை முறையைத்தான் கடைபிடித்தனர். தற்போது வெளியாகும் திரைப்படங்களில் இவற்றை மிகைப்படுத்துவதும் ஆடம்பரமாகச் சித்தரிப்பதும் சுவாரசியமான திரைப்பட அனுபவத்துக்காகத்தானே தவிர, வரலாற்றுப் பதிவுகளுடன் ஒத்துப்போகாது. 80 முதல் 90 சதவீத சோழர் காலக் கல்வெட்டுகள், ஓவியங்கள், ஓலைச்சுவடிகள் சோழ மன்னர்களின் கொடை, வள்ளல் தன்மையைப் பற்றியே சொல்கின்றன” என்று சொல்லும் தீபிகா, தற்கால இளைஞர்கள் பலர் கல்வெட்டு சார்ந்த படிப்பில் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகிறார். “இந்த மாணவர்களில் பலர் படிப்பை முடித்ததும் அதைத் தொல்லியல் ஆய்வுக்குப் பயன்படுத்தாமல், போதுமான ஆய்வு அனுபவமின்றிப் பிறருக்குப் பாடம் எடுக்கச் செல்வது நல்லதல்ல” என்கிறார் தீபிகா.
“வரலாற்றுச் சின்னங்கள் பல சிதிலமடைந்து, சரியான பராமரிப்பு இல்லாததால் ஏராளமான வரலாற்றுப் பதிவுகளைத் தவறவிட்டிருப்போம்” என்று சொல்லும் தீபிகா, அண்மையில் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரச் சுவரில் தான் கண்டடைந்த ஓவியமே அதற்குச் சாட்சி என்கிறார். பிரகாரத்தை நவீனப்படுத்துவதற்கான வேலை நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த ஓவியத்தைப் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார்.
தன் ஆய்வுகள் அனைத்துக்கும் தன் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்தான் காரணம் என்கிறார். பேராசிரியர் கே. ராஜன், கள ஆய்வுகளின்போது இவர் எழுப்பிய அனைத்துக் கேள்விக்கும் பொறுமையாகப் பதிலளித்ததையும், பேராசிரியர் வசந்தியின் ஊக்கம் பல்லவர்களின் சிற்பங்களை ஆராய தன்னைத் தூண்டியதையும் மகிழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார்.
தற்போது சென்னை கிறித்துவக் கல்லூரியில் தொல்லியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் தீபிகா, இளம்பெண்கள் பலர் இத்துறையைத் தேர்வுசெய்து படிப்பது வரவேற்கத்தக்கது என்கிறார். பெற்றோர் பலரும் முன்வந்து தொல்லியல் துறை சார்ந்த படிப்புகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பது இந்தத் துறையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார் தமிழ்நாட்டின் இளம் தொல்லியல் ஆய்வாளர்களில் ஒருவரான தீபிகா.
- வினோதினி குமார், பயிற்சி இதழாளர்.