

பத்ரகாளி பட்டிக்காட்டிலேயே பிறந்து பட்டிக்காட்டிலேயே வளர்ந்தவள். மற்றபடி அவளுக்குப் பட்டணத்தில் இருப்பவர்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கைமுறை பற்றியும் எதுவும் தெரியாது. அதுவும் அவள் ஊரான பட்டிக்காட்டில் அவளுடைய அய்யா ஆடு மேய்த்தார். இவளும் அவருடன் சேர்ந்து பகலெல்லாம் ஆடு மேய்ப்பாள். வீட்டு வேலையெல்லாம் அவள் அம்மாவும் அக்காவும் செய்துவிடுவதால் இவளுக்கு ஆடு மேய்க்க வேண்டியது, இரவில் கெடையில் போடவேண்டியது, வீட்டுக்கு வந்து வட்டில் நிறைய சோறும் குழம்பும் சாப்பிட்டுவிட்டு மந்தையிலோ தெருவிலோ படுக்கப்போய்விடுவது... இதுதான் வேலை.
அவள் அத்தை மகன் சின்னசாமிக்குப் பட்டணத்தில் அதிசயத்திலும் அதிசயமாக போலீஸ் வேலை கிடைத்துவிட்டது. அந்த ஊரில் கவர்மென்ட் வேலை என்பதே கிடைக்காத ஒரு பொருளாக இருந்தது. அப்படி இருக்கும்போது சின்னசாமிக்கு கவர்மென்ட் வேலை கிடைத்தால் விடுவார்களா? உடனே பத்ரகாளியின் அம்மா, “என் மருமகன் பட்டணத்தில் வேலை பார்க்கிறாக. அங்க இருக்க பட்டணத்துப் பொம்பளைக எல்லாம் இப்படி வேலை பாக்குற ஆம்பளைகளைக் கண்டால் விடவே மாட்டாங்களாம். அதனால இந்த மூகூர்த்தத்திலேயே என் மவளை அவுகளுக்குக் கட்டிவச்சிட்டுத்தேன் மறுவேலை பார்க்கணும்” என்று சொன்னாள்.
பத்ரகாளிக்கோ இந்த ஊரைவிட்டு முகம் தெரியாத ஊருக்குப் போக மனமில்லை. மாட்டேன் என்று சொன்னால் சொந்தக்காரர் எல்லாம் வைவார்கள், தன் அம்மா தன்னைக் கொன்றே போட்டுவிடுவாள் என்று பயந்து சம்மதித்துவிட்டாள். சின்னசாமியோ பத்ரகாளியைக் கட்டிக்கொண்டு இல்லாத நாகரித்தை எல்லாம் சொல்லிக்கொடுத்துப் பழைய பத்ரகாளியாக இல்லாமல் புது பத்மாவதியாகக் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தான். நாலைந்து பேர் இவளைக் கூட்டிப்போய் பட்டணத்தில் போலீஸ் லைன் வீட்டில் குடிவைத்துவிட்டுப் புத்திமதி சொல்லிவிட்டு வந்தார்கள்.
பத்ரகாளிக்கு அந்த வீடே பிடிக்கவில்லை. வீட்டுக்கும் காட்டுக்கும் செலாத்தலாக நடந்தவளுக்கு இந்த வீடு பிடிக்கவில்லை. அதுவும் காலையில் வீட்டுக்கு வெளியே முள்வேலிகளில் காலைக்கடனைக் கழிப்பவளுக்கு வீட்டுக்குள்ளேயே வெளிக்கு இருந்தது எப்படியோ இருந்தது. சின்னசாமியும் விடிய முன்னே முட்டைகோஸ் வாங்கிவந்து கொடுத்து சமையல் செய்ய சொல்லியிருந்தான். இவன் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது, “என்னய வீட்டில் கொண்டுபோய் விடு” என்று பத்ரகாளி அழுது கூப்பாடுபோட அவனும் என்னமோ ஏதோ என்று கொண்டுவந்து விட்டுவிட்டான். “என்னடி இப்படி வந்துட்டே” என்று கேட்டவர்களிடம், “வெஞ்சனத்துக்குக் காய் வாங்கியாந்து கொடுத்தான். அதென்ன ‘உரிக்க உரிக்கத் தோலாண்டி ஒன்னுமில்லா மாயாண்டி’யா போயிருச்சி. காய் வாங்கத் தெரியாதவன்கூட எல்லாம் என்னால வாழ முடியாது” என்று சொல்லிவிட்டு அழுதாள்.
(தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.