Last Updated : 08 Oct, 2017 11:59 AM

 

Published : 08 Oct 2017 11:59 AM
Last Updated : 08 Oct 2017 11:59 AM

பெண்ணுக்கு நீதி 04: விபத்தில் முளைத்த வித்துகள்

விபத்துக்கள் விபரீதங்களைப் பிரசவிப்பதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பாலியல் வன்கொடுமை ஏற்படுத்தும் விபத்து, வித்துகளையும் முத்துகளையும் உருவாக்கிவிடும்போது ஏற்படுவது அதிர்ச்சியா அவமானமா ஆச்சரியமா என்றே புரிந்துகொள்ள முடியாத ஒரு நிலை. ஆமாம். உலகில் ஆண்டுக்குச் சுமார் ஐந்து லட்சம் குழந்தைகள் அதாவது பதின்ம வயதினர் தனக்குக் குழந்தை பிறந்துவிடும் என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள ஒரு லட்சம் பதின்ம வயது பெண்களும் இதில் அடங்குவர்.

தடம் மாற்றும் இனக் கவர்ச்சி

கட்டுப்பாடான குடும்ப அமைப்புக்கும் கட்டுப்பெட்டித்தனத்துக்கும் பெயர்போன இந்தியாவுக்கு இந்தத் தகவல் அதிர்ச்சியளிக்கலாம். ஆனால், இவை நம்பத்தகுந்த வட்டாரங்கள் அளித்த தகவல்களே. பருவ காலம் என்பது வாலிபத்தின் வாடிவாசல். கனவுச் சிறகுகளால் காற்றில் மிதக்கும் சாகசம். கவர்ச்சி முகம்காட்டி பதின்ம பருவத்தினரின் பாதையைத் தடம் மாற்றும் கைகாட்டி. அவை செய்யும் விபரீதங்கள் விளங்கிக்கொள்ள முடியாத இன்னொரு மோனலிஸா.

காளையர்க்கும் கன்னியர்க்கும் காதல் கூடாது என்பதல்ல பெரியோர்களின் வாதம். காதலின் பெயரால் வேடமிட்டுவரும் பாலினக் கவர்ச்சியைக் கண்டுகொண்டு ஒதுக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. அத்தகைய ஒரு பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் தங்கள் வளரிளம் பருவப் பெண் ஷீலாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி தரக் கோரி மனு செய்தார்கள். தங்கள் மகளைப் பாலினக் கவர்ச்சியால் தூண்டி, கவர்ந்துசென்று பலாத்காரம் செய்ததால் உருவான கர்ப்பம் கலைக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்கள். இதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் நிலைப்பாடு என்ன? கர்ப்பத்துக்குக் காரணகர்த்தாவாக இருந்த இளைஞனின் நிலைப்பாடு என்ன? அவற்றைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. நீதிமன்றம் அந்த இருவரின் கருத்தைத் தெரிந்துகொள்ள அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்தது.

குழந்தைத் தாய்

ஷீலா ஒரு வளரிளம் பெண். உயர்நிலைப் பள்ளியில் படித்துவந்தாள். ஒருநாள் பள்ளிக்குச் சென்றவள் வீடு திரும்பவில்லை. ஷீலாவின் பெற்றோர் பதறிப்போனார்கள். நீண்ட விசாரணைக்குப் பிறகு அவளுடைய பள்ளித் தோழிகள் மூலம் அவள் ஒரு இளைஞனுடன் எங்கோ சென்றுவிட்டதாகத் தெரியவந்தது. அதற்குப் பிறகு நீடித்த தீவிரத் தேடலின் முடிவில் ஷீலா பெற்றோரின் கட்டுப்பாட்டுக்கு வந்தாள். தான் மட்டும் தனியாகவும் வரவில்லை. ஆனால், தனக்குள் இன்னொரு உயிரைக் கருவில் சுமந்து வந்தது பிறகுதான் புரிந்தது.

சந்திக்குச் சந்தி சனங்கள் என்ன பேசுவார்களோ எனச் சிந்தித்துச் சிந்தித்தே ஷீலாவின் பெற்றோருக்குப் பைத்தியம் பிடிக்காத குறைதான். காவல்துறையில் புகார் செய்து, ஷீலாவைக் கடத்திச் சென்றவனைச் சட்டத்தின் முன் நிற்கவைத்தார்கள். அந்தச் சமயத்தில் அவள் 18 வயதுக்கும் குறைந்தவள் என்பதால் அவள் வயிற்றில் இருக்கும் கருவைக் கலைப்பதற்கு உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்கள் பெற்றோர். ஆனால், ஷீலா தான் ஒரு குழந்தை என்றாலும், தன்னால் இன்னொரு குழந்தையை வளர்த்துக் காட்ட முடியும் என்று வீம்பு பிடித்தாள்.

தொடரும் கேள்விகள்

குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞனும் விடலைத்தனம் விலகாத முகத்துடன்தான் இருந்தான். ஆனால், ஷீலா தன் மனைவி என்றும் தன் குழந்தை தனக்கு வேண்டும் என்றும் வாதிட்டான். இந்த வழக்கு இன்றைய இளைய சமுதாயம் சென்றுகொண்டிருக்கும் தவறான தடங்களைச் சுட்டிக் காட்டுகிறது. இருவருமே கல்வி பயிலும் மாணவர்கள் என்ற நிலையிலும், வாழ்வாதாரத்துக்குப் பெற்றோரை நம்பியிருந்த நிலையிலும், வளரிளம் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில் ஆபத்துகள் நிறைந்துள்ள நிலையிலும் ஷீலாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்கள் ஒருநேரம் பூதாகரமாகவும் மறுநேரம் மிகச் சாதாரணமாகவும் மாறிமாறித் தோன்றிக்கொண்டிருந்தன.

குறைமாதப் பிறப்பு, குறைப்பிறப்பு, குறைந்த எடைப் பிறப்பு, பிறவி ஊனத்துடனே குழந்தை பிறப்பது, தாய் - சேய் இருவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை போன்ற விளைவுகளை வளரிளம் பெற்றோர் எப்படி எதிர்கொள்வார்கள்? இத்தகைய பெற்றோர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான தகுதியைப் பெறுதல் மற்றும் வளர்த்துக்கொள்தல் ஆகியவை இத்தகைய முறையற்ற திருமணங்கள் மூலம் முற்றிலுமாக வேரறுக்கப்படுவதை அவர்கள் யோசித்துப் பார்த்திருப்பார்களா? பெற்றோராக இருப்பதற்கான பொறுப்பையும் தகுதியையும் இவர்கள் அடைந்திருக்கத்தான் முடியுமா? ஒருவேளை அந்தத் தகுதியை அடையவில்லை என்று வைத்துக்கொண்டாலும், வளர்ந்துகொண்டிருப்பது தொப்புள்கொடி உறவு என்கிற நிலையில் அந்த உறவை வேண்டாம் என்று சொல்ல முடியுமா? தான் சுமந்துகொண்டிருக்கும் தன் வாரிசை உருவாக்குவதில் உள்ள உரிமையை மறுக்க முடியுமா?

ரஷ்யா, சுவீடன் போன்ற பல்வேறு நாடுகளில் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் அனைத்துத் தேவைகளையும் அரசாங்கமே கவனித்துக்கொள்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சில நலத்திட்டங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கர்ப்பிணிப் பெண்ணின் முழுப் பராமரிப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியானால் அந்தப் பொறுப்பை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? இதுவரை அப்படி ஏற்றுக்கொண்டிருந்தால், தொட்டில் குழந்தைத் திட்டத்துக்குத் தேவையென்ன? இப்படி எந்தவிதப் புரிதலும் இல்லாமல் லாவணி பாடிக்கொண்டிருக்கும் நேற்றைய பெற்றோர்களையும் அவர்களுக்குப் பிறந்த இன்றைய பெற்றோர்களையும் கைகுலுக்க வைப்பது எப்படி?

இறகுகளோடு பிறந்த நீங்கள்

ஏன் தவழத் துடிக்கிறீர்கள்?

- பாரசீகக் கவிஞர் ரூமி கேட்டதைப் போல நாமும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அது போகட்டும். சட்டம் அவர்களை எப்படிப் பார்க்கிறது? அவர்களது குழந்தைகளை எப்படிப் பார்க்கிறது? கற்றுக்குட்டி காதல் மணங்களைச் சட்டம் அங்கீகரிக்கிறதா, சமூகம் ஏற்பளிக்கிறதா? தொடர்ந்து பார்ப்போம்.

(பாதைகள் விசாலமாகும்)

கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்

தொடர்புக்கு: judvimala@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x