

பட்டயக் கணக்காளர் எனப்படும் ‘சிஏ’ தேர்வில் தேர்ச்சி பெற்று, தன் ஐந்து மாதக் கைக்குழந்தையுடன் மேடை ஏறி பட்டம்பெற்றார் பாத்திமா சகானா. சிஏ படிப்பு என்பதே நாளெல்லாம் படித்துக்கொண்டே இருக்கும் பெரும் உழைப்பைக் கோருவது. திருமணம், குழந்தைப் பேறு இவற்றுக்கு மத்தியில் இதை எப்படிச் சாத்தியமாக்கினார் பாத்திமா? கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் செட்டிப்படி பகுதியைச் சேர்ந்த பாத்திமா சகானாவிடம் பேசினோம்.
“என் வீட்டில் நாங்கள் மொத்தம் ஐந்து பிள்ளைகள். எனக்கு இரண்டு அண்ணன்கள், இரண்டு அக்காக்கள். கடைக்குட்டி என்பதால் அனைவருக்கும் நான் செல்லம். நான் பத்தாம் வகுப்புப் படித்தபோதே என் அண்ணன் சிஏ பாஸ் ஆகிவிட்டார். அதனால், எனக்கும் சிஏ படிக்கும் ஆசை துளிர்த்தது. அதற்காகவே மேல்நிலைப் பாடப்பிரிவில் வணிகவியல் பிரிவில் சேர்ந்திருந்தேன்.
சிஏ படிக்கும் ஆசையில் முதலில் ஃபவுண்டேஷன் தேர்வை எழுதினேன். அதில் முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்றுவிட்டேன். ஆனால் சிஏவுக்கான நுழைவுத் தேர்வில் முதல்முறை வெற்றி கிடைக்க வில்லை. அதற்காக மனம் சோர்ந்துவிடவில்லை. என் மொத்த குடும்பமும் பின்னால் இருந்து என்னைத் தாங்கினார்கள். அடுத்தமுறை தேர்வெழுதி வென்றேன். சிஏ படித்துக்கொண்டு இருந்தபோதே நல்ல வரன் வந்ததால் திருமணமும் முடிந்தது” என்று முகம் மலர்கிறார்.
பாத்திமா சகானாவின் கணவர் முபீன் இப்ராகிம் ஷார்ஜாவில் மென்பொறியாளராக உள்ளார். சிஏ தேர்வில் வெற்றிபெற்றிருக்கும் பாத்திமா, தானும் விரைவிலேயே ஷார்ஜாவாசியாகப் போவதாகவும், இந்தச் சான்றிதழ் பெறும் தருணத் துக்காகவே காத்திருந்ததாகவும் சொல்கிறார்.
“திருமணத்துக்கு முன்பு வரை சிஏ படிப்புக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றேன். திருமணத்துக்குப் பின் நின்றுவிட்டேன். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் எனச் சொல்வார்கள். எனது இந்த வெற்றிக்குப் பின்னால் என் கணவரின் ஊக்குவிப்பு பெரிய அளவில் இருந்தது. திருமணத்துக்குப் பின்பு பயிற்சி வகுப்புக்குச் செல்லாமலேயே எட்டு பேப்பர்கள் தேர்ச்சிபெற்றேன். தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருந்தபோது கர்ப்பமானேன். சான்றிதழை வாங்கச் செல்லும்போது என் செல்ல மகன் யுவானுக்கு ஐந்து மாதங்கள் ஆகியிருந்தது. அவன் எப்போதும் என்னைவிட்டு நகர மாட்டான். அவனோடு மேடை ஏறிப் பட்டத்தைப் பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது. பெருமையாக மட்டும் அல்லாமல் அதை ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாகவும் உணர்கிறேன்” என்று நெகிழும் பாத்திமா சகானாவின் வார்த்தைகளில் தாய்மையும் பெருமிதமும் ததும்புகின்றன.
- என்.சுவாமிநாதன்