

தோழிகள் மூவரும் (அல்லி, லல்லி ராணி, நான்) சமீபத்தில் நாங்களாகவே சுற்றுலா ஏற்பாடுகள் செய்து, இதுவரை மூவரும் செல்லாத இடத்துக்கு உற்சாகத்துடன் செல்லத் தேர்ந்தெடுத்த இடம் கொல்லிமலை. கேள்விப்பட்ட இடம்தான். ஆனால், மூவரும் கல்லூரி முடித்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து இயற்கையை ரசிக்கவும் அதன்வழியே எங்களைப் புதுப்பித்துக்கொள்ளவும் விழைந்தோம்.
விழுப்புரத்தில் இருந்து காலையில் புறப்பட்டோம். வழியில் கல்கி, பாலகுமாரன், சாண்டில்யன் ஆகியோரது நாவல்கள் பற்றியும் கல்லூரி வாழ்க்கை குறித்தும் பேசிக்கொண்டே சென்றோம். ஆத்தூரில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு கொல்லிமலையின் அழகை ரசிக்க ஆரம்பித்தோம். ‘நம்மருவி’யில் நாங்கள் மூவரும் நனைந்தோம். சில்லென்ற உணர்வில் எங்களை மறந்து நின்றோம். எங்களைச் சுற்றிலும் ஒரு வானவில். மணி பன்னிரண்டைக் கடக்க மலையின் முகட்டில் அருவியின் மேல் சூரியக்கதிர் எங்களை வானவில்லுக்குள் அடக்கியது. எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இதமான வெயிலும் மலையின் காற்றும் வானவில்லுக்குள் நாங்களுமாக அவை சந்தோஷத் தருணங்கள்.
அங்கிருந்து நேராக விடுதிக்குச் சென்றோம். விடுதியைச் சுற்றி வளர்ந்திருந்த மரம், செடி, கொடிகள் என ரம்மியமான சூழலாக இருந்தது. மாலை ‘மாசிலா அருவி’க்குச் சென்று அதிலும் நனைந்தோம். இங்கு இன்னும் அதிகமான நீர்வரத்து. தலையில் விழுந்த அருவி புத்துயிர் தந்தது. மீண்டும் விடுதி. இரவு சாப்பாட்டுக்குப் பின் தூங்கி விடியற்காலையிலே எழுந்துவிட்டோம். விடுதியைச் சுற்றி நடக்க ஆரம்பித்தோம். இளங்காலைச் சூரியக்கதிர்கள் மெல்ல மெல்ல மேகங்களில் இருந்து எட்டிப் பார்க்க, குளிர்ந்த காற்றோடு மூலிகைகளின் வாசத்தோடு வண்ண வண்ணப் பூக்களின் அழகோடு உயர்ந்த மரங்களின் உச்சி வரை படர்ந்திருந்த மிளகுக் கொடிகளைக் கண்டு ரசித்தவாறு இரண்டு கி.மீ. தொலைவைக் கடந்திருப்போம்.
பிறகு ‘ஆகாய கங்கை’ அருவியைப் பார்க்கப் புறப்பட்டோம். அங்கு சென்ற பின்புதான் தெரிந்தது 1,200 படிகளைக் கடக்க வேண்டுமென்று. விடவில்லையே நாங்கள். மூவரும் இறங்க ஆரம்பித்தோம். படியேறுபவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து மனதில் பயம் வந்தது. ஆனாலும் விடவில்லை. ஓய்வெடுத்தாவது சென்றுவிட வேண்டுமென்று நடந்தோம். மேலே ஏறிச் செல்ல சக்தி தேவைப்படும் என்று நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. எங்களின் கால் வலியைத் தாங்கும் மன வலிமை அதிகமாக இருந்தது. ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி நீர் அருந்தி, பழச்சாறு குடித்து கடைசியாக அருவியின் அருகில் சென்றதும் அதன் சாரலில் நனைந்தோம். சாரலிலும் அதன் சத்தத்திலும் அந்த அருவியின் அழகில் பயம்கூட வந்தது. கொல்லிமலையைப் பிரிய மனமின்றி விடைபெற்றோம். எங்களாலும் முடியும் என்ற பெரிய நம்பிக்கையை இந்தப் பயணம் எங்களுக்குத் தந்தது. அந்தப் புத்துணர்வோடு இரவு விழுப்புரம் வந்து சேர்ந்தோம்.
- தமிழரசி, விழுப்புரம்.