

அந்தக் காலங்களில் மணப்பெண்ணாக இருப்பவர்கள் தாலி கட்டி முடிந்த உடனே வயது வித்தியாசமின்றி எல்லாருடைய கால்களிலும் விழுந்து கும்பிடு துட்டு வாங்குவார்கள். மணப்பெண் காலில் விழுந்த உடனே பெரியவர்கள் அவர்களை எழுப்பி, திருநீறு பூசி கையிலிருக்கும் காசைத் தருவார்கள். சிறியவர்கள் ஓடி ஒளிவார்கள். முடியாதபட்சத்தில் கையிலிருக்கும் காசைக் கொடுத்துவிட்டு ஒடுவார்கள். மணப்பெண்களும் அவசர அவசரமாகக் காலில் விழுந்து துட்டை வசூலித்துவிடுவார்கள். ஏனென்றால் அப்படிச் சேர்க்கும் துட்டு அவர்களுக்கு மட்டுமே சொந்தம்.
அன்று பசுவந்திக்குக் கல்யாண நாள். அவள் முதல் நாளே எப்படியும் இந்தக் கல்யாணத்தில் நாம் ஐநூறு ரூபாயாவது சேர்த்து ஒரு ஆட்டுக் குட்டியை வாங்கிவிடவேண்டுமென்று முடிவோடு இருந்தாள். அதனால், விடியற்காலையில் பொன்னுமணி அவள் கழுத்தில் தாலிகட்டிய உடனே எழுந்து அவசர அவசரமாக எல்லாருடைய காலிலும் விழுந்தாள். இவளைக் கண்டவுடன் பதறி ஓடியவர்களும் உண்டு, பதறாமல் கையில் இருக்கும் காசை அவள் கையில் போட்டுவிட்டுப் பந்தியில் உட்கார்ந்தவர்களும் உண்டு.
பெருமாள் கோயிலில் தாலிகட்டியதால் கோயிலுக்கும் இவர்கள் வீட்டுக்கும் ரொம்ப தூரம் இருந்தது. அதனால், கல்யாணத்துக்கு வந்த கூட்டத்தோடு மணமகனும் மணமகளும் நடந்துவந்தார்கள். வெயில் சுள்ளென்று கொளுத்தியது. இவர்கள் வருகிற வழியில் சற்றுத் தொலைவில் பெத்தையா உழுதுகொண்டிருந்தார். அவருக்கு ஊரில் நல்ல பெயருண்டு. அவர் வீட்டுக்குப் பசி, செலவுக்குக் காசு வேண்டுமென்று சென்றால் இல்லை என்று சொல்லாமல் இருப்பதைக் கொடுப்பார்.
அவர் உழுவதைப் பார்த்ததும் பசுவந்திக்குச் சந்தோசமாக இருந்தது. ‘எப்படியும் சுருட்டி கட்டியிருக்கும் வேட்டியில் அஞ்சு ரூவாய்க்கும் குறையாம வச்சிருப்பார். நம்ம அவர் காலுல விழுந்து வாங்கிரணும்’ என்று நினைத்தவாறு உழவுக்காட்டை நோக்கி ஓடிப்போய் சடாரென அவர் காலில் விழுந்துவிட்டாள். தன் வேலையிலேயே கவனமாக இருந்தவர் இவள் விழுந்ததைப் பார்த்ததும் பதறித் தூக்கியவர், “என்ன தாயி இப்படி வந்து விழுந்துட்டே. விடியமின்ன எந்திரிச்சி காட்டுக்கு வந்தவன்ட்ட என்ன துட்டு இருக்கும்? உன் பாட்டுக்கு இப்படிச் செஞ்சிட்டயே” என்றார். “தாத்தா, நீரு ஆசிர்வாதம் பண்ணி உம்ம கையால இந்த உழவுக்காட்டுச் சிறு கட்டிய கொடுத்தாலும் போதும்” என்றாள் பசுவந்தி. இப்படிச் சொன்ன அவளை வெறுங்கையோடவா அனுப்புறது என்று கொஞ்ச நேரம் யோசித்தவர், “இந்தா தாயீ, இந்த ஒரு காளை மாட்டைக் கும்பிடுதுட்டா வச்சிக்கம்மா” என்று ஒரு மாட்டை அவள் கையில் கொடுத்துவிட்டு ஒரு மாட்டோடு தன்வீடு நோக்கி நடந்தார்.
(தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.