

என்னைவிடப் பல விஷயங்களில் என் மகள் சிறப்பாகச் செயல்படுவது குறித்து எனக்குப் பெருமையே. ஸ்மார்ட் போனில் செட்டிங்க்ஸ் எதையாவது மாற்ற நான் திணறும்போது நொடிகளில் அதைச் செய்துமுடித்துவிட்டுச் சிரிப்பாள். கணினியும் அவளுக்குக் கைவந்த கலை. எண்பதுகளின் பாடல்களில் திளைக்கிற எனக்கு அவள் விரும்பிக் கேட்கிற பாப் ஆல்பங்களின் பெயர்கள்கூட வாயில் நுழையாது. கொரியன் சீரியல்கள் குறித்த தகவல்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பாள்.
இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புக்குப் போகப்போகிறாள் என்பதால் செல்போன் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும்படி அவளிடம் சொன்னேன். அவ்வளவுதான்... வீடே இரண்டாகும்படி ஆடித் தீர்த்தாள். அவள் இந்த அளவுக்குக் கோபப்படுவாளா என்பது அதிர்ச்சியாக இருந்தது. போனைத் தர முடியாது என்று அவள் உறுதியாகச் சொன்ன பிறகுதான், அவளிடம் போனைத் தரக் கூடாது என்பதில் நான் உறுதியாக நின்றேன்.
அவள் அப்பாவைத் துணைக்கு அழைத்தாள். அவரும் என் பக்கம் என்பதில் கொதித்துப்போய் போனைத் தூக்கிப்போட்டு உடைத்தாள். “என்னிடம் போன் இருக்கக் கூடாது என்று சொன்ன பிறகு அது இருந்தால் என்ன, உடைந்தால் என்ன?” என்று வெறிபிடித்தவள்போல் கத்தியபோது என்ன செய்வதென்று தெரியவில்லை. அடுத்து வந்த நாள்களில் அவள் என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. சாப்பிடுவதையும் குறைத்துக்கொண்டாள். குழந்தை பாவம் என்பதால் அவள் வீட்டில் இருக்கும்போது என் போனைப் பயன்படுத்திக்கொள்ளச் சொன்னேன். அதற்குப் பிறகு ஓரளவுக்கு இயல்புக்குத் திரும்பினாள்.
பொதுத் தேர்வுக்குப் படிப்பதால் அவளை இடையூறு செய்யக் கூடாது என்று அவள் அறைக்குச் செல்ல மாட்டேன். சில நேரம் என் செல்போனுடன் தன் அறைக்குச் சென்றுவிடுவாள். காரணம் கேட்டபோது, என்ன படிக்க வேண்டும் என்பதை நண்பர்களோடு குழுவாகப் பேச வேண்டும் என்றாள். அதன் பிறகு நானும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஒருநாள் அவளுடைய வகுப்பு ஆசிரியரிட மிருந்து அழைப்பு வந்தது. நான் வருவது என் மகளுக்குத் தெரியக் கூடாது என்றார். அதன்படி அவள் பள்ளிக்குச் சென்ற பிறகு நான் சென்றேன். அவள் வகுப்பு ஆசிரியர் சொன்னதைக் கேட்டு எனக்கு மயக்கம் வராத குறைதான். தன் வகுப்பில் படிக்கும் மாணவனுடன் என் செல்போனிலிருந்து தினமும் சாட் செய்திருக்கிறாள். எல்லை மீறியும் பேசியிருக்கிறாள். அந்த மாணவனின் அம்மா சொன்ன புகாரின் அடிப்படையில்தான் ஆசிரியர் என்னை அழைத்திருக்கிறார்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் மகள் இன்னும் குழந்தைதான் என்கிற நினைப்பில் இடி விழுந்துவிட்டது. என் கண் முன் இருப்பவள் மட்டுமே என் மகள் அல்ல, அவளுக்கென்று தனி உலகம் இருக்கிறது. அவளைக் கண்டிப்பதா, மனம்விட்டுப் பேசுவதா எதுவுமே புரியவில்லை. இது நடந்து பத்து நாள்கள் இருக்கும். அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் அனுப்பியதாகச் சொல்லப்பட்ட குறுஞ்செய்திதான் நினைவுக்கு வந்து என்னை அலைகழிக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் தோழிகளே? இது என் மகளின் படிப்பைப் பாதிக்கக் கூடாது. இதிலிருந்து என் மகள் நல்லவிதமாக மீண்டுவர வழிகாட்டுங்கள்.
- பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி.
வழிகாட்டுவோம் நாம்
தோழிகளே, இந்த செல்போன் யுகத்தில் குழந்தை வளர்ப்பு என்பது பெரும் சவாலாக இருக்கிறது. இதுபோன்ற தருணங்களை நீங்களும் எதிர்கொண்டிருக்கலாம், அதிலிருந்து உங்கள் குழந்தைகளை நல்லவிதமாக மீட்டெடுத்திருக்கலாம். அவற்றை எங்களோடு பகிர்ந்துகொண்டால், அது பிறருக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையலாம்.