

கணவன், மனைவி, குழந்தைகளோடு இருப்பதே கூட்டுக் குடும்பமாகக் கருதப்படும் இந்தக் காலத்தில் மாமனார், மாமியார் அதிகப்படியாகத் தோன்றுவதில் வியப்பில்லை. ஆனால், நாம் கொஞ்சம் விட்டுக்கொடுப்பதால் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
இன்றைய மாமனார்/ மாமியார்கள் அடுத்த தலைமுறையைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். உங்கள் மதிப்புகளை அவர்கள் மீது திணிக்காமலிருக்க இந்தப் புரிதல் உதவும். உங்கள் வாழ்வில் மகனும் மகளும் இருக்கவேண்டுமென்றால், அவர்களது துணையுடன் அனுசரித்துப் போக வேண்டியது அவசியம். மகனுக்காக/ மகளுக்காக விட்டுக்கொடுப்பதில் உறவு தழைக்கும். தவிர உங்களது கடைசிகாலத் தனிமையில் அவர்கள்தானே ஆதரவு.
குழந்தைகளுக்கு மணம் முடித்தபின் அவர்கள் ‘தன் குடும்பம்’ எனும் வட்டத்தை அமைத்துக் கொள்கிறார்கள். அதில் நீங்கள் இருக்க முடியாது. நீங்கள் அடுத்த குடும்ப வட்டத்தில் (extended family) இருக்கிறீர்கள். உங்கள் மீது அதே பாசம் உண்டு; ஆனால், அவர்களுடைய துணைக்கு முதலிடம் கொடுப்பதுதானே நியாயம்? அவர்களது இந்தச் செயலால் நீங்கள் புண்பட்டுப் போவீர்கள்; ஆனால், ஆரோக்கிய உறவின் நிமித்தம் இந்தப் புண்களை ஆற்றிவிடவேண்டும். ‘இனி என் மகன் அல்ல; மருமகளுடைய கணவன்’ என்றும், ‘என் மகளல்ல; மாப்பிள்ளையின் மனைவி’ என்றும் எண்ணங்களை நெறிப்படுத்துவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தலாம்.
இரட்டை அளவுகோல் சரியா?
l ‘வீடியோ காலி’ல் மகன் பேசும்போது, பின்னால் நடமாடும் மருமகள் ஒரு ஹலோ சொன்னால் என்ன என்று கோபப்படும் மனம், மகள் பேசுகையில் வீடியோவில் தெரியும் மாப்பிள்ளையைப் பற்றி இதே கேள்வியை எழுப்புமா?
l வீட்டுவேலைகளில் மகன் தன் மனைவிக்குக் கைகொடுத்தால், ‘அவள் இவனை வேலை வாங்குகிறாள்’. ஆனால், மகளுக்கு மாப்பிள்ளை செய்து கொடுத்தால், ‘எவ்வளவு உதவியாக இருக்கிறார்’.
l மருமகளைப் பற்றி மகனிடம் தனிமையில் புகார்செய்வதன் நோக்கம், அவளைத் ‘திருத்துவது!’ உங்களை உங்கள் மாமியார் தன் மகன் மூலமாகத் ‘திருத்திய’ போது கோபம் வந்ததா?
l வெளிநாட்டில் வாழும் மகனோ, மகளோ உங்களையும் உங்கள் சம்பந்திகளையும் தங்கள் செலவில் அங்கு வரவழைப்பார்கள். சம அந்தஸ்த்தை அவர்களுக்குக் கொடுப்பது நெருடும். மூச்ச்...
l பேரப்பிள்ளைகளைச் சீராட்டுவதிலும் இருவருக்கும் உரிமையுண்டு. ஏற்றுக் கொள்ளுங்கள்.
இன்றைய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத தாய் தன் குழந்தை தன்னைவிட்டு விலகிப்போய்விட்டதாகப் பதறுகிறார். நீங்கள் புகார் சொல்லச் சொல்ல மேலும் அவர்கள் விலகிவிடுவார்கள்.
இந்த வயதில் (40 முதள் 55 வரை) உடல்ரீதியான மாற்றங்களும் பாதிப்புகளும் (சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மாதவிடாய் உபாதைகள், இதயக்கோளாறு) வரக்கூடும். கூடவே ஏமாற்றம், கோபம் போன்ற எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் பதற்றம், மனச்சோர்வு ஆகியவையும் அழுத்துகிறபோது உடல் உபாதைகள் கூடவும் வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் மருத்துவரையோ உளவியல் நிபுணரையோ சந்திப்பதை வழக்கம்போல் ஒத்திப்போடாதீர்கள்.
விட்டுக்கொடுப்பதால், உங்களை ஒரு தியாகியாக நினைத்து சுயபச்சாதாபத்தில் மூழ்கிவிடுகிறீர்கள். அது ஆபத்து. சுயபச்சாதாபம் ஓர் உலோகப் பாத்திரத்தில் உள்ள அமிலம் மாதிரி பாத்திரத்தையே அரித்துவிடும். நீங்கள் அதிகமாகப் புண்பட்டுப்போன சம்பவங்களை அசைபோட்டுக் கொண்டே இருக்காதீர்கள். அவற்றால் மனநிலை இன்னும் மோசமாகும். கசப்பான அனுபவங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, அவற்றில் கற்ற பாடத்தை மனத்தில் நிறுத்திக்கொள்ளுங்கள். புண்படுத்தியவர்களிடம் நல்லவற்றைக் கண்டுபிடித்து, சமாதானமடையுங்கள். யாரும் பொல்லாதவர் அல்ல. அவர் களுக்கும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் வந்த ஏமாற்றங்கள் உண்டு. பிறரை மாற்றுவது உங்கள் கையில் இல்லை. ஆனால், அவரால் உங்களுக்குப் பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்வது முற்றிலும் உங்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு கசப்பு அனுபவம் எனும் கறுப்புப் புள்ளி உங்கள் இனிய வாழ்க்கை எனும் வண்ணக் காகிதத்தை ஏன் கெடுக்க வேண்டும்?
(மனம் திறப்போம்)
கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.