

சிறுவயதிலேயே ஏற்பட்ட ஒரு விபத்தால் பார்வையை இழந்த ஃபிரான்ஸைச் சேர்ந்த லூயி பிரெய்ல் (Louis Braille), பார்வையற்றவர்களும் கல்வி கற்க வேண்டும் என்கிற உயரிய கனவுடன் மனிதக் குல வரலாற்றில் ஒரு புரட்சிகர மாற்றத்தை உருவாக்கினார். கல்வி என்பது பார்வைக் குறைபாடில்லாத மனிதர்களுக்கு மட்டுமான உரிமை அல்ல. கல்வி கற்பதில் பார்வையற்றவர்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே அவருடைய சிந்தனையின் மையம்.
பார்வையற்றவர்கள் படிக்கவும் எழுதவும் உதவும் ‘பிரெய்ல்’ (Braille) எழுத்துமுறையைப் பதினைந்தாவது வயதில் உருவாக்கி, கல்விச் சமத்துவத்தின் புதிய பாதையை அவர் திறந்தார்.
இருளில் வாழ்ந்த மனிதக் குலத்துக்கு விடியலை உருவாக்கிய லூயி பிரெய்ல் 1809 ஜனவரி 4இல் பிறந்தவர். அவரின் இந்த மகத்தான பங்களிப்பை உலகம் முழுவதும் நினைவுகூரும் வகையில், ஐக்கிய நாடுகள் அவை 2019 முதல் ஜனவரி 4ஆம் தேதியை ‘உலக பிரெய்ல் நாளா’க (World Braille Day) அறிவித்தது.
பார்வையை இழந்து இருளில் வாழும் மனிதர்கள், பிரெய்ல் எழுத்துமுறையைப் பயன்படுத்திக் கல்வி கற்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் வாழ்வில் ஒளி பிறக்க வேண்டும் என்பதே இந்த நாளின் அடிப்படை நோக்கம். பார்வையற்றவர்கள் மற்றவர்களைப் போலவே சமூகத்தில் கல்வி, அதிகாரம், சுதந்திரம், சமூக உரிமைகளைப் பெற வேண்டும். அதற்கான திட்டங்களை உருவாக்கிச் செயல் படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கம்.
லூயி பிரெய்ல்