

திறன்பேசிகள் பயன்பாட்டில் மிக முக்கியமான பாத கமான விளைவு அதன் பயன்பாட்டை நம்மால் நிறுத்த முடிவதில்லை. சமூக ஊடகங்கள், வலைத்தளங்கள் போன்றவற்றை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
தேவையானதை மட்டும் பார்த்துவிட்டு மூடிவைக்க முடியவில்லையே ஏன்? இதைப் புரிந்துகொள்ள போதைப் பொருள் களுக்கு ஒருவரை அடிமையாக்கும் இரண்டு பண்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த இரண்டு பண்புகள்:
1. குறிப்பிட்ட அளவு போதை அல்லது நிறைவைத் தரும் போதைப் பொருளின் அளவு அதிகரித்துக்கொண்டே போவது.
2. அப்போதைக்குப் பொருள் இல்லை என்றால் பதற்றம் போல் உடலில் மாறுதல் ஏற்படுவது.
முதல் பண்பு - இதைத் தாங்கும்திறன் (Tolerance) எனச் சொல்கிறோம். மது அருந்துபவர்களை எடுத்துக்கொள்வோமே. ஆரம்பத்தில் அவர்கள் குடிக்கும் அளவு மிகக் குறைவாக இருக்கும். பியர், ஒயின் போன்ற ஆல்கஹால் அளவு குறைந்த மதுபானங்களைக் குடித்தாலே போதை கிடைத்துவிடும்.
ஆனால், தொடர்ச்சியாக அவர்கள் மது அருந்திக் கொண்டே இருந்தால், அவர்களுக்கு இது போன்ற ஆல்கஹால் அளவு குறைந்த பானங்களால் போதை கிடைக்காது. விஸ்கி, பிராந்தி போல் ஆல்கஹால் அளவு அதிகமுள்ள பானங்களை அருந்தத் தொடங்குவார்கள். அதிலும் கட்டிங் (90 மிலி), குவாட்டர் (180 மிலி), ஆஃப் (360 மிலி) என்றெல்லாம் அளவு அதிகரித்துக் கொண்டே போய்விடும்.