

ஒரு குழந்தையின் புன் னகை என்பது அதன் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, ஆரோக்கியத்தின் பிரதி பலிப்பு. சிரிக்கும் குழந்தை ஒரு வீட்டின் ஒளியாகத் திகழும். ஆனால், சில குழந்தைகள் முழு மனதுடன் சிரிக்காமல் உதட்டை மூடி சிரிப்பார்கள். ஒளிப்படம் எடுக்கும்போது வாயை மூடிக்கொள்வார்கள்.
சிலர் பேசும்போதுகூட உதட்டைச் சரியாகத் திறக்க தயங்குவார்கள். இந்த மாற்றங்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணங்களில் ஒன்று, சீரற்ற பல் அமைப்பு (Malocclusion). பற்கள் ஒழுங்காக ஒரே வரிசையில் இல்லாத நிலைதான் சீரற்ற பல் அமைப்பு. சில பற்கள் முன்னால் இருக்கும்.
சில பற்கள் பின்னால் மறைந்திருக்கும். பற்கள் நெருக்கமாக இருப்பதால் ஒன்றின் மீது மற்றொன்று ஏறி நிற்கலாம். சில குழந்தைகளுக்குப் பற்கள் இடைவெளியுடன் காணப்படலாம். சில நேரம் வாய் மூடும்போது மேல் பற்கள், கீழ் பற்கள் சரியாகப் பொருந்தாது.
இதனால், குழந்தையால் சரியாகக் கடிக்க முடியாது. குழந்தை வளர வளர இந்த மாற்றம் தெளிவாகத் தெரியும். வளரவளர இது சரியாகிவிடும் என்று பல பெற்றோர் நம்புவார்கள். சில நேரத்தில் சிறிய மாற்றங்கள் சரியாகலாம். ஆனால், பெரும்பாலும் அது மோசமடையவே சாத்தியம் உள்ளது. அதனால் தொடக்கத்திலேயே கவனிப்பது நல்லது.
காரணங்கள்
பல் சீரற்ற நிலைக்குப் பல காரணங்கள் உண்டு. சில குழந்தைகளுக்குப் இது மரபுசார்ந்து இருக்கலாம். பெற்றோரின் தாடை சிறியதாக இருந்தால், குழந்தைக்கும் பற்களுக்கான போதுமான இடமின்மை உருவாகலாம். சில குழந்தைகளுக்கு பற்கள் பெரியதாக இருக்கும். தாடையில் இடமின்மை இருந்தால் பற்கள் நெருக்கமாக வரலாம்.