

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. கோடையில் வெப்ப அலை மிக அதிகமாக வீசக்கூடும். வெப்ப அலையால் உடலுக்கு நேரும் முதல் பிரச்சினை உடல் சூடாதல். இதை ‘Hyperthermia’ என்கிறோம். ஆக, உடல் சூடாவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.
உடல் சூட்டைத் தடுக்க...
* தண்ணீர்ப் பஞ்சம் இல்லாத ஊர்களில், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
* தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் ஊர்களில், ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை கை, கால், முகம் கழுவலாம். இது உடல் உஷ்ணத்தைத் தணிக்க உதவும்.
* வெப்பத்தை உள்ளேயே தக்க வைக்கும் கம்பளி / லினன் போன்ற உடைகளைத் தவிர்க்க வேண்டும்.
* ஜீன்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. கறுப்பு நிற ஆடைகளைத் தவிர்ப்பது சிறந்தது. பருத்தி ஆடைகள் அணியலாம்.
* வெளியே செல்லும்போது குடை/தொப்பி அவசியம். முடிந்தவரை உடல் மீது வெயில் படாதவாறு பார்த்துக்கொள்வது நல்லது.
* வெயில் அனல் அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணிவரை வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். பகலில் வெளியே சென்று விளையாடுவதைத் தவிர்த்துக் காலை, மாலை நேரத்துக்குத் தள்ளிப்போடலாம்.
நீர்ச்சத்து குறைவது
கோடைக்காலத்தில் உடல் அதிகமாகச் சூடானால், உடலில் வியர்வை அதிகமாகச் சுரக்கும். அந்த வியர்வை உடலைக் குளிர்விக்க முயலும். உடலுக்குள் உள்ள உஷ்ணத்தை நம் நுரையீரல் வெளியிடும். மூச்சுக்காற்று வழி வெளியே அனுப்ப முயலும்.
இப்படி நம் உடல் அதிக நீர்ச்சத்தைப் பயன்படுத்திக் குளிர்விப்ப தால் ஏற்படும் பிரச்சினைதான் ‘Dehydration’ - நீர்ச்சத்து குறைந்து போவது. இதைச் சில அறிகுறிகளை வைத்து உணரலாம்.
* நாக்கு வறண்டு போதல்
* சிறுநீர் அடர் மஞ்சளாக வெளியேறுவது
* தசைப்பிடிப்பு
* தலைசுற்றல்
* கை, கால் தளர்வு