

தமிழகத்தில் ஆறு வயதுக்கு உள்பட்ட சுமார் 15% குழந்தைகளிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பதாக மாநில திட்டக் குழுவின் தரவுகள் தெரிவிக் கின்றன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
அறிகுறிகள்
ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளை அறிகுறிகளை வைத்து அறியலாம். வயதுக்கு ஏற்ற உடல் எடை, உயரம் இல்லாதது (Wasting and Stunting), எப்போதும் சோர்வுடன் இருப்பது, விளையாட ஆர்வமில்லாமல் இருப்பது, அடிக்கடி நோய்வாய்ப் படுதல், காயங்கள் குணமாக அதிக நாள் ஆவது, முடி வறண்டு போவது, தோலில் சுருக்கங்கள், வெளிறிய நிறம் ஏற்படுவது, கவனக்குறைவு, கற்றலில் மந்த நிலை ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.
ஊட்டச்சத்தின்மைக்குக் காரணங்கள்
ஏழ்மை காரணமாக குழந்தைக்குத் தேவையான, தரமான உணவை வாங்க முடியாமல் போவது, எந்த உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன என்கிற விழிப்புணர்வு இல்லாதிருப்பது, குழந்தைகளுக்கு மாவுச்சத்து, புரதம், கொழுப்புச் சத்து, விட்டமின், தாதுக்கள் நிறைந்த உணவு வகைகளைச் சம அளவில் தராமல் இருப்பது, அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு அல்லது காய்ச்ச லால் பசியின்மை போன்றவை உடல் எடையைக் குறைக்கின்றன. உணவில் உள்ள சத்துகளை உடல் உறிஞ்சுவதை வயிற்றுப்போக்கும் குடல் புழுக்களும் தடுக்கின்றன.
குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பின் தாய்ப்பாலுடன் சேர்த்துப் போதுமான உணவு வகை கள் வழங்காமல் இருப்பது, சத்துகள் இல்லாத, வெறும் கலோரிகள் மட்டுமே நிறைந்த சக்கை உணவு வகைகளை (Fast foods) அதிகம் உட்கொள்வது, கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு, பிறக்கும் குழந்தை குறைந்த எடையுடன் பிறப்பது போன்றவையும் ஊட்டச் சத்துக் குறைபாட்டுக்குக் காரணமா கின்றன.
தீர்வுகள் என்ன?
தாய்ப்பால், இணை உணவு: பிறந்த ஆறு மாதம்வரை தாய்ப்பால் மட்டுமே அளித்து, அதன்பிறகு சரியான ஊட்டச் சத்துள்ள இணை உணவு வகைகளை வழங்க வேண்டும். நன்கு மசிக்கப்பட்ட பருப்பு சாதம், ராகிக் கூழ், காய்கறி சூப் போன்ற இணை உணவு வகைகளைத் (Comple mentary feeds) தொடங்க வேண்டும்.
சரிவிகித உணவு: புரதச்சத்துள்ள முட்டை, பால், பருப்பு வகைகள், சுண்டல், மீன், கோழி இறைச்சி ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும்.