

மனிதர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்துகள், நுண்ணூட்டச் சத்துகள், தாது சத்துகள் பலவும் அவசியம். குறிப்பாக மூளை வளர்ச்சி, ஆரோக்கியமான நரம்புச் செயல்பாடு, ரத்தச் சிவப்பணுக்களின் உருவாக்கம் ஆகியவற்றுக்கு நுண்ணூட்டச் சத்தான விட்டமின் பி12 மிகவும் அவசியம்.
ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) நடத்திய தேசியக் கணக்கெடுப்பில், இந்தியாவில் வளரிளம்
பருவத்தினர் விட்டமின் பி12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் 2023-25 காலக்கட்டத்தில் நடத்திய ஆய்வில் வளரிளம் பருவத்தினரில் சிறுவர்கள் 66.1% பேர், சிறுமியர் 65.4% பேருக்கு இந்தக் குறைபாடு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவிக்கிறது.
இதேபோல கர்ப்பிணிகளில் 63.1% பேரும், 20-59 வயதுக்கு உட்பட்ட ஆண்களிடையே 60.4% பேரும், 15-49 வயதுக்கு உட்பட்ட பெண்களிடையே 57.4% பேரும், 5-9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 46.5% பேரும் இந்தக் குறைபாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.