

ஆஸ்துமாவுக்கு இன்ஹேலர் சிகிச்சை எடுப்பதால் உடல் எடை அதிகமாகும் என்றும் ஆஸ்துமா சிகிச்சையில் பயன்படுத்தப் படும் ஸ்டீராய்டுகளால் ஆபத்து என்றும் மருந்தைச் சுவாசித்து இழுக்கும் கருவியான இன்ஹேலர் சிகிச்சை எடுப்பது நல்லதல்ல என்றும் மக்களிடத்தில் கற்பிதங்கள் நிலவுகின்றன.
இதன் விளைவால், நுரையீரல் சார்ந்த ஒவ்வாமை அழற்சி நோயான ஆஸ்துமாவுக்குச் சரியான சிகிச்சையை எடுப்பதில் சுணக் கம் இருப்பது தெரியவருகிறது. இங்குச் சில விஷயங்களை விளக்க வேண்டியது அவசிய மாகிறது.
ரத்தத்தை உடலெங்கும் கொண்டு செல்லத் தேவையான உந்துசக்தியை அளிக்கும் ‘பம்ப் மோட்டார்’ போல இதயம் செயல்படுகிறது. இதயத்திலிருந்து தனக்கு வரும்
அசுத்தமான ரத்தத்தை சுத்த மாக்கி, மீண்டும் இதயத்துக்கு ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட சுத்தமான ரத்தத்தைத் தரும் சலவைக்காரர்களாக நுரையீரல்கள் செயல்படுகின்றன. இதயத்தின் நலன் எப்படி முக்கியமோ அதற்குச் சற்றும் குறைந்ததல்ல நுரையீரல்களின் நலன்.
இதுதான் நுரையீரல்
நுரையீரல் என்பது மூச்சுக்குழாய் (trachea). அதிலிருந்து பிரியும் இரண்டு மூச்சுக்குழாய் கிளைகள் (bronchi). அவற்றிலிருந்து பிரியும் பல நுண் மூச்சுக்குழாய்கள் (Bronchioles), எண்ணிலடங்கா இந்த நுண் மூச்சுக்குழாய்களின் முடிவில் நுண் காற்றுப் பைகள் (Alveoli) கொண்ட அமைப்பு.
நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்சிஜனை ரத்தத்தில் ஏற்றி, ரத்தத்தில் இருக்கும் கார்பன் டைஆக்சைடை மீண்டும் சுவாசம் மூலம் வெளியேற்றும் ஈடற்ற பணியை நுரையீரல் செய்துவருகிறது.
ஆஸ்துமா என்பது ஒவ்வாமை யினால் சுவாசப்பாதையில் ஏற்படும் அழற்சி (Inflammation) நோய். அலர்ஜி (allergy) என்பது ஒவ்வாமை. அழற்சி என்பது காயம் என்கிற அர்த்தத்தில் பொருள் கொள்ள வேண்டும்.
அதாவது சுவாசப் பாதைக்குள், நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம் ஒவ்வாமையைத் தூண்டும் காரணிகள் (allergens) உள்ளே செல்லும்போது நுரையீரலின் சுவாசப்பாதைக் குழாய்கள் தேவைக்கு அதிகமாக எதிர்வினை யாற்றி, அதன் விட்டத்தில் சுருங்கி விடுகின்றன.
கூடவே சுவாசப் பாதையில் உள்ள உள்புறச் சுவர் செல்கள் அதிகமான சளிச் சவ்வுச் சுரப்புகளைச் சுரக்கின்றன. இதன் விளைவால் நாளடைவில் சுவாசப் பாதை நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத் தும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இதனால் நுரையீரலால் ஆக்சிஜனைச் சரிவரப் பெற்று, ரத்தத்தை முறையாகச்சுத்திகரிக்க இயலாமல் போகிறது.