

ஒரு வேலையை ஒருவர் செய்து முடிக்க அரை மணி நேரம் ஆகும். அதே வேலையை இருவர் செய்தால் எவ்வளவு நேரம் ஆகும்? விடை- கால் மணி நேரம் அல்ல, ஒரு மணி நேரம். ஏனெனில், இருவரும் பேசிச் சிரித்துச் சண்டை போட்டுக்கொண்டு நேரத்தைக் கடத்திவிடுவார்கள். இதுவே நான்கு பேர் செய்தால் நான்கு மணி நேரம்கூட ஆகிவிடும்!
நகைச்சுவைக்காகச் சொன்னாலும் இதில் நமக்குத் தேவையான ஓர் உண்மை உள்ளது. இரண்டு பேர் ஒரு வேலையைச் செய்யும்போது அதிகக் கவனச் சிதறல் ஏற்பட்டுத் தாமதமா கிறது. அதேபோல் ஒரே நபர் இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்தாலும் அதேதான் நடக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் பார்ப்பதை ‘மல்ட்டி டாஸ்கிங்’ (Multi tasking) என்பார்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைப் பார்ப்பது குறித்து மூளை நரம்பியல், உளவியல் துறைகளில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. அவை அனைத்தும் சொல்வது ஒன்றுதான், ‘மல்டி டாஸ்கிங்’ என்பது மூளையின் செயல்திறனை வெகுவாகக் குறைத்துவிடும் என்பதுதான் அது.