

கண்ணாடி அணிவதே தெளிவாகப் பார்க்கத்தான். அந்தக் கண்ணாடியால் பார்வைக்கு மேற் கொண்டும் இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சரியாக அணியாவிட்டல் ஏற்படும் பிரச்சினைகள் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. மூக்கிலிருந்து கண்ணாடி நழுவி அடிக்கடி கீழே இறங்கும்போதெல்லாம் கண்ணாடியைக் கையால் பின்னுக்குத் தள்ளி மூக்கின்மேல் நிறுத்த வேண்டும்.
வேலையின் இடையே அடிக்கடி இப்படிச் செய்வது தொந்தரவுதான். பேசாமல் மூக்கில் இறங்கியபடியே கண்ணாடி இருக்கட்டும் என்று அப்படியே சிலர் பழகிவிடுவார்கள். சிலருக்குக் கண்ணாடி இறங்கியிருப்பதே தெரியாது. சிலருக்குக் கண்ணாடி பெரிதாக இருக்கும். அதாவது, கண்ணாடி ஃபிரேமில் லென்ஸ் பொருந்தியுள்ள இருபுறமும் உள்ள வளையங்கள் (Rim) பெரிதாக இருக்கும். இது பெரிதாகும்போது ஃபிரேமின் பக்கவாட்டுக் காதுமடல் (Temple) பகுதியும் நீளமாகும்.
எப்படி இருக்க வேண்டும்? - தேர்வு செய்யும் ஃபிரேமின் காதுமடல் சரியான நீளத்தில் இருந்தால், முகத்தில் ஃபிரேம் ‘கிச்’சென்று இருக்கும். மாறாக சற்று நீளமாக இருந்தால், ஃபிரேம் தளர்வாக முன்னும் பின்னும் அசையும். இதனால், ஃபிரேம் அடிக்கடி முகத்திலிருந்து நழுவும். முகத்திலிருந்து ஃபிரேம் கீழே இறங்குவதற்குப் பெரும்பாலும் இதுதான் முக்கியக் காரணம். அதற்குக் காதுமடலை நீளத்துக்கு ஏற்றாற்போல் காதுக்கு அருகில் சரியாக வளைத்துவிட வேண்டும். ஃபிரேம் வாங்கும்போதே கண்ணாடிக் கடையில் இதைப் பார்த்துச் சரிசெய்து தருவார்கள்.
கண்ணாடி ஃபிரேமின் மூக்குப் பகுதியின் இருபுறமும் இருக்கிற பிடிப்பானைச் (Nose pad) சரிசெய்து அணிந்தால் மூக்கில் வசதியாகப் பிடித்துக்கொள்ளும். இல்லையேல் நகரும். ஃபிரேமின் இரண்டு வளையங்களையும் இணைக்கும் இணைப்பான் (Bridge) மூக்குக்கு ஏற்ற அளவில் இருப்பதையும் கவனிக்க வேண்டும். இது ஃபிரேமை மூக்கில் நன்றாக நிலைநிறுத்த உதவும். காதுமடல் பகுதியின் முனை, காதின் மேல் வளைந்து காதின் பின்புறத்தில் வசதியாகப் பொருந்த வேண்டும். குறிப்பாக, காதின் பின்புறத்தை அழுத்தாமல் இருக்க வேண்டும். தளர்வாக இருந்தால் முகத்தில் இருந்து நழுவிவிடும்.