

உடலுக்குத் தலையே முதன்மை யானது. தலையில் உள்ள மூளைதான் எண்ணங்கள், செயல்கள், சொற்கள் ஆகியவற்றைத் திட்டமிட்டுச் செயல்படுத்துகிறது. எனவே, மூளையின் நலம் மிகவும் முக்கியம். குழந்தை கருத்தரித்ததில் இருந்து இறக்கும்வரை மூளையின் நலம் மிக முக்கியம். மூளையின் நலத்தை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?
கருத்தரித்ததில் இருந்தே தொடர்ச்சியான பரிசோதனைகள் அவசியம். கருத்தரிக்கும் முன்பு அங்க, அவயக் குறைபாடுகளுக்கு ஏதாவது மருந்துகளை உட்கொண்டுவந்தால், மருத்துவர் ஆலோசனையைக் கேட்டறிந்து சிசுவுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் செயலாற்ற வேண்டும்.
பிரசவக் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டு அங்க, அவயக் குறைபாடுகள், மூளை வளர்ச்சி குறைபாடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 99% குழந்தைப் பிறப்பு மருத்துவ மனைகளில்தான் நிகழ்கிறது. குழந்தை பிறந்த பிறகு மருத்துவப் பரிசோதனைகள் செய்து, குழந்தைக்கு அங்கக் குறைபாடு இருக்கிறதா, தலை சுருங்கி இருக்கிறதா, மூளை வளர்ச்சி குன்றி வளருமா என்பதையெல்லாம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு... சிறு வயது முதலே குழந்தைகளின் மூளை பராமரிப்பு மிகவும் முக்கியம். அவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு வகைகள், மறதியைப் போக்கக்கூடிய - நினைவாற்றலை வளர்க்கக்கூடிய காய்கறிகள் நிறைந்த உணவு வகைகளை அதிகம் கொடுக்க வேண்டும். கொழுப்பு இல்லாத உணவையும் கொடுக்க வேண்டும்.