

‘தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தவறு என்கிறீர்கள். அப்படியென்றால் முறுக்கு, சீடை, பக்கோடா, சமோசா போன்றவை சாலச் சிறந்தவையா?’ - அடிக்கடி என்னிடம் சண்டை கட்டும் அறிவியலாளர்கள் கேட்கும் கேள்வி இது.
‘நிச்சயமாக இல்லை’ என்பதுதான் எப்போதுமே அதற்கான பதில். மரபுச்சுவை என்றாலும் அறிவியல் அதை ஆழமாக அறிந்து சொல்லும்போது, அதை வீம்புக்குத் தோளில் சுமக்காமல் விலகிச் செல்வதுதான் நல்லது.
வீட்டுப் பண்டத்திலும் கவனம் தேவை
சங்க இலக்கியத்தில் அப்ப வணிகர் மோதகம் விற்றதைப் பற்றிப் படிக்கிறோம். இன்று இன்ஸ்டாகிராமில் பயின்று ஓட்ஸ் வடை, ராகி பக்கோடா செய்து சிலாகிப்பதைப் பார்க்கிறோம்.
இப்படி வீட்டில் செய்யும் சிற்றுண்டியில், அதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய், சர்க்கரை, உப்பு, தேர்ந்தெடுக்கப்படும் தானியம் ஆகியவற்றில்தான் கூடுதல் அக்கறை முதலில் தேவை.
நல்லவேளை இன்னமும், ‘ஏங்க வரும்போது, ஒரு பொட்டலம் சோடியம் நைட்ரேட், பொட்டாசியம் புரோமேட், அப்படியே 10 ரூவாய்க்கு BHAயும் (Butylated Hydroxyanisole) பாலிசார்பிட்டாலும் வாங்கியாந்துருங்க’ என வீட்டில் யாரும் சொல்லி அனுப்புவதில்லை.
ஆனால் அதேநேரம், தீவிரப் பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்பாளர்களோ, இவை இல்லாமல் ஒருபோதும் சக்கை உணவைத் தயாரிக்கத் தொடங்குவதில்லை. அந்த வகையில் சற்று ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம்.