சிப்ஸ் உருவாக்கும் சிக்கல் | ருசிக்கும் முன் யோசி 6

சிப்ஸ் உருவாக்கும் சிக்கல் | ருசிக்கும் முன் யோசி 6
Updated on: 
2 min read

நொறுக்குத் தீனிகளி லேயே உலகில் முதலிடம் வகிப்பது சிப்ஸ். குழந்தைகள் முதல் முதியோர்வரை பலரும் இந்தச் சக்கை உணவின் அடிமைகள். உருளைக்கிழங்கு சிப்ஸ், வாழைக்காய் சிப்ஸ், நேந்திரன் சிப்ஸ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் என எல்லா வகை சிப்ஸூம் உடலில் ஏறக்குறைய ஒரே தாக்குதலை நடத்தவல்லவை.

சர்க்கரைச் சத்தும் ஸ்டார்ச்சும் நிரம்பியுள்ள இந்தக் கிழங்குகள், எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் போது, அதில் உருவாகும் ‘அக்ரிலமைடு’ தான் இந்த சிப்ஸினால் ஏற்படும் முதல் சிக்கலே. நரம்புத்தளர்ச்சி, மகப்பேறின்மை முதல் புற்றுநோய்வரை உருவாக்கக்கூடிய சாத்தியமுள்ள வேதிப்பொருள் ‘அக்ரில மைடு’கள் என்கிறது உணவு அறிவியல்.

எவ்வளவு அக்ரிலமைடு?

“எவ்வளவு சிப்ஸ் சாப்பிட்டால் இதெல்லாம் வரும்? எல்லாத்துக்கும் தரவு இருக்கா? சும்மா கலவரப்படுத்தாதீங்க!" எனக் கேட்போருக்கு ஒரு செய்தி. தொடக்க நிலை முடிவுகள் ஏராளமாக இருக்கின்றன. துல்லிய அறிவியல் முடிவுகள் வர இன்னும் பல ஆண்டுகள் ஆகக்கூடும். பல வெளி நெருக்கடிகளால், ஒருவேளை வராமலேயேகூடப் போகலாம்.

ஆனால், நோய் வர வாய்ப்புள்ளது என அறிவிக்கும்போதே உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. விலங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில், இந்த சிப்ஸில் உருவாகும் அக்ரிலமைடுகள் ஆண்களின் விதைப்பை (testes), தைராய்டு கோளம், அட்ரீனல் கோளம், சில வகைத் திசுக்களில் புற்றுநோயை உருவாக்கும் தன்மை உடையவை என உறுதிபட நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஆனால், மனிதர்கள் மீது விரிவான ஆய்வுகள் ஏதும் நடத்தி முழுமையான முடிவுகள் வெளியாகவில்லை. ஆனால், புற்றுநோய்களைப் பட்டியலிடும் உலக சுகாதார அமைப்பான IARC அமைப்பு, அக்ரிலமைடை புற்றுநோய் வரவைக்கக் கூடிய சாத்தியமுள்ள காரணிகள் (probabale carcinogen) பட்டியலில் சேர்த்துள்ளது.

Loading content, please wait...

X