

பார்கின்சன் நோயைப் பற்றி நினைத்தாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது கை நடுக்கம்தான். பார்கின்சன் நோயில் பரவலாக அறியப்படும் அறிகுறிகளில் ஒன்று கை நடுக்கம்.
என்றாலும், அது எப்போதும் முதலில் தோன்றும் அறிகுறியாக இருப்பதில்லை. பார்கின்சன் நோய் ஏற்படுத்தும் மாற்றங்கள், வெளிப்படையான கை நடுக்கம் போன்றவை 10-20 ஆண்டுகளுக்கு முன்பே அமைதியாக உருவாகத் தொடங்கிவிடலாம்.
எப்படி ஏற்படுகிறது?
பார்கின்சன் நோய் என்பது உடலின் அசைவுகளைச் சீராகவும் ஒருங்கிணைந்த வகையிலும் கட்டுப்படுத்த உதவும் ‘டோப மைன்’ வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் நரம்பு செல்கள் படிப்படியாக அழிவதால், மெதுவாக முன்னேறும் நரம்பியல் நோய்.
டோபமைன் குறையும்போது உடலின் அசைவுகள் மெதுவாகி, ஒருங்கிணைப்பு குறைகிறது. மேலும், ஆல்பா-சினுக்ளீன் (Alpha-synuclein) என்கிற புரதம் அசாதாரண மாகச் சேர்ந்து நரம்பு செல்களைப் பாதிப்பதும் பார்கின்சன் நோயின் இன்னொரு முக்கிய அடையாளம்.
வெளிப்படையாகக் கை நடுக்கம் தோன்றும் முன்பே சில நோயாளிகள் நடப்பது, உடை அணிவது, வழக்கமான அன்றாடப் பணிகளைச் செய்வது முன்பை விட மெதுவாகிவிட்டதை உணரலாம்.
மற்ற வர்களுக்கு உடல் இறுக்கம், நடக்கும்போது கைகள் இயல்பாக ஆடாமல் இருப்பது அல்லது லேசான சமநிலைக் குறைபாடுகள் போன்றவை தோன்றக்கூடும். இவை பார்கின்சன் நோயின் இயக்க (Motor) அறிகுறிகள் என்றழைக்கப்படுகின்றன.
ஆனால், நோயின் தொடக்கக் கால அறிகுறிகள் சில நேரம் உடல் அசைவுகளுடன் தொடர்பில்லாதவையாகவும் இருக்கலாம். நீண்டகால மலச்சிக்கல், மணத்தை உணரும் திறன் குறைதல், பதற்றம், மனச்சோர்வு அல்லது ‘REM Sleep Behaviour Disorder’ எனப்படும் ஒரு தூக்கக் கோளாறு (தூக்கத்தில் கனவு காணும்போது அதற்கேற்ப உடல் அசைவுகளை வெளிப்படுத்தும் நிலை) போன்றவை வழக்கமான இயக்க அறிகுறிகள் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படக்கூடிய இயக்கமற்ற (Non-motor) அறிகுறிகள்.