

முதுகுத்தண்டு பிறவிக் குறைபாட்டுக்குக் குழந்தை பிறந்த பிறகு அறுவைசிகிச்சை செய்வதுதான் இதுவரை நடைமுறையில் இருந்தது. ஆனால், தாயின் வயிற்றிலேயே குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்து முதுகுத்தண்டு குறைபாட்டைச் சரிசெய்ய முடியும் என்பதை இந்திய மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்தான் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
தாயின் கருப்பையில் 25 வார (6 மாத கரு) குழந்தைக்கு முதுகுத்தண்டில் ஏற்பட்டிருந்த குறைபாட்டைச் சரிசெய்யும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டி ருக்கிறார்கள்.
முதுகுத்தண்டின் ஒரு பகுதி முழுமையாக மூடப்படாமல், நரம்புகள் வெளியே பிதுங்கியிருக்கும் மைலோ மெனிங்கோசீல் (Myelomeningocele) எனும் கடுமையான பிறவிக் குறைபாடு இந்த அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யப்பட் டுள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கருவிலேயே செய்யப்படும் முதல் திறந்த நிலை முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை இது தான். சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சை, இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மருத்து வர்கள் இணைந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அதேநேரத்தில் இந்தச் செய்தி, பிறவிக் குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தையும் உணர்த்து கிறது.
நரம்புக் குழாய் குறைபாடுகள்
கர்ப்பத்தின் முதல் நான்கு வாரங்களிலேயே குழந்தையின் மூளையும் முதுகுத்தண்டும் உருவாகத் தொடங்குகின்றன. இவை உருவாகும் தொடக்க அமைப்பே நரம்புக் குழாய் எனப்படுகிறது. இந்தக் குழாய் முழுமையாக மூடப்படாதபோது ஏற்படும் பிறவிக் குறைபாடுகளே நரம்புக் குழாய் குறைபாடுகள்.