

டைனசோர்கள் இப்போது இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ‘சர்க்கஸ்களில் வளர்க்கப்பட்டு மனிதன் சொல்வதற்கு ஏற்ப ஆடும். ‘நல்ல நேரம்’ போன்ற திரைப்படங்களில் எம்ஜிஆருடன் கால்களைத் தூக்கி ஆடியிருக்கும்’.
இப்படி நகைச்சுவைக்காகச் சொன்னாலும், அதில் ஓர் உண்மை இருக்கிறது. உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருந்தாலும் மனித இனம் மட்டும் இவ்வளவு முன்னேற்றங்கள் அடைந்ததற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு.
1. மனித மூளையின் முன்பகுதி அபாரமாக வளர்ந்து சிந்தனை, மொழித் திறன் போன்றவை கூர்மையடைந்தன.
2. மனித இனம் கூட்டமாக வசிக்க தொடங்கியது.
மனிதர்கள் ஒரு சமூக விலங்கு என்பது அரிஸ்டாட்டில் காலத்திலிருந்தே சொல்லப்படும் கருத்து. கோடிக்கணக்கான மக்கள் சேர்ந்து ஒரு குழுவாக இயங்குவதால்தான் மனித இனம் இவ் வளவு மேம்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்க வேண்டும் என்றால்கூடச் சில நூறு பேரின் முயற்சி தேவையாக இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட இந்த இரண்டு செயல்பாடுகளுமே திறன்பேசிகளால் அதிகம் பாதிப்படைகின்றன. இவ்வளவு நாளும் திறன்பேசிகளால் தனிமனிதச் செயல்பாடுகள் எப்படிப் பாதிப்படைகின்றன என்பதைப் பார்த்தோம். திறன்பேசிகளின் வளர்ச்சி மனிதர்களுடைய சமூக நடவடிக்கைகளை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
குறைக்கும் திறன்பேசி
இந்தக் காலத்தின் மிகப் பெரிய முரண்பாடு என்னவென்றால், உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் அடுத்த நொடி நம்மால் தொடர்புகொள்ள முடியும். ஆனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மனிதர்கள் மிகவும் தனிமை யில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
வீட்டைவிட்டு வெளியே சென்று பிறரைச் சந்திக்கவேண்டிய அவசியம் வெகுவாகக் குறைவதால், திறன்பேசிகளிலேயே ஆழ்ந்திருப்பது அதிகரித்துள்ளது. அப்படியே வெளியே வந்து நண்பர்களாகச் சேர்ந்திருந்தாலும் அவரவர் தங்கள் திறன்பேசிகளையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.