

மேடைப் பேச்சாளரான நண்பர் ஒருவருக்கு நிகழ்ந்த அனுபவம் இது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியூர் நிகழ்ச்சி ஒன்றில் பேச அவரை ஏற்பாடு செய்திருந்தனர். ரயிலிலிருந்து அவர் இறங்கிய நேரத்தில் அவருடைய திறன்பேசி பழுதடைந்துவிட்டது.
அந்த ஊரில் நிகழ்ச்சி எங்கு நடக்கிறது, யார் நடத்துகிறார்கள், எங்கு தங்க வேண்டும், யார் அழைத்துச் செல்ல வருவார்கள் என்கிற எல்லாத் தகவல்களுமே அவருடைய திறன்பேசியில்தான் இருந்தன.
அவருக்கு அவரது நெருங்கிய நண்பர்களின் எண்கள்கூட நினைவில்லை. ஐந்தாறு மணி நேரம் அவதிப்பட்டார். திறன்பேசியைச் சரிசெய்த பின்னரே அவருக்கு நிம்மதி வந்தது. நாம் நம்முடைய நினைவுத்திறன், அறிவார்ந்த வேலைகள் பலவற்றை அலைபேசிகளுக்கு ‘அவுட்சோர்ஸ்' செய்திருக்கிறோம்.
இந்தத் தொடரின் தொடக்கத்தில் சாக்ரடீஸ் எழுத்துக் கலைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைச் சொன்னோமல்லவா? எழுதி வைத்துக்கொண்டால் மூளைக்கு வேலை குறையும். நம் நினைவுத்திறன் வெகுவாகக் குறையும் என்றார் அவர்.
ஒரு காலத்தில் இலக்கியங்கள், சட்டங்கள், மத நூல்கள் எல்லாமே வாய் வழியாக மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்துப் பாதுகாத்து வரப்பட்டன. ஆனால், எழுதும் முறை வந்த பிறகு சுட்ட களிமண், ஓலைச்சுவடி என்றெல்லாம் பயன்படுத்தி, எழுதி வைத்தாலும், அவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே புழங்கிவந்தன.