

அலுவலகத்திலிருந்து களைத்துப்போய் வீடு திரும்புகிறீர்கள். அன்று முழுவதும் ஏகப்பட்ட மன அழுத்தம். வந்தவுடன் சோபாவில் அமர்ந்து ஓய்வெடுக்கலாம், மனதை ரிலாக்ஸ் செய்யலாம் எனத்திறன்பேசியில் ரீல்ஸ் பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். வெகு நேரம் பார்த்த பின்னர் ஒவ்வொரு சமூகவலைத்தளமாகச் சென்று பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்.
இரண்டு மணி நேரம் இப்படியே செல்கிறது. நன்றாக ஓய்வெடுத்தி ருந்தால் மனம் அமைதியாகவும் உற்சாகமாகவும்தானே இருக்கும். ஆனால், உண்மையில் இதுபோல் மணிக்கணக்கில் பார்த்த பின்பு சலிப்பும் மனச்சோர்வும் அதிகரிக்கின்றன. அலுவலகத்திலிருந்து வரும்போது இருந்ததைவிட அதிக மன அழுத்தத்துக்குக்கூட ஆளாகக்கூடும்.
ஏன் சலிப்பும் மனச்சோர்வும் அதிகரிக்கின்றன? இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம், சென்ற கட்டுரையில் சொன்னதுபோல் மூளையில் ஏற்படும் வேதி மாற்றங்களால் ஒரு பொருளின் மகிழ்ச்சி தரக்கூடிய அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது.
இதனை, ‘தாங்கும் திறன்’ (Tolerance) எனப் பார்த்தோமல்லவா? ஒருகட்டத்தில் எவ்வளவு அதிகமாகப் போதைப் பொருளை எடுத்தாலும் நிறைவின்மை ஏற்படுவதுபோல் நீண்ட நேரம் ஒரு செயலைச் செய்தாலும்கூட அந்த அளவு மகிழ்ச்சியைத் தர முடியாமல் போய்விடுகிறது.
எதிர்வினைகள்: ஒரு நபர் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதற்கு முக்கியக் காரணம், இந்தத் தாங்கும் திறன் அதிகரிப்பு. இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதுதான் அந்தப் போதைப் பொருள் இல்லையென்றால் உடலில் ஏற்படும் நடுக்கம், மனப்பதற்றம் போன்ற எதிர்வினைகள். இதை மருந்தின் விளைவு குறைவதால் வரும் எதிர்வினைகள் (Withdrawal symptoms) என்பார்கள்.