

குழந்தைப் பருவ நினைவுகளை மீண்டும் அனுபவிப்பதில் பலருக்கும் ஆர்வம் உண்டு. அந்த வகையில், சென்னையில் உள்ள ஓர் உணவகத்தில் செரிலாக் கலந்த பானம், குழந்தைகளுக்கான பால் புட்டியில் (Feeding Bottle) பெரியவர்களுக்கு வழங்கப்படுவது சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானது.
குழந்தைப் பருவத்தின் சுவையை மீண்டும் அனுபவிப்பதாகப் பலரும் இதை ரசிக்கின்றனர். இது ஓர் உணவுப் பரிசோதனையாக இருக்கலாம். ஆனால், இதன் பின்னணியில் பெற்றோர் சிந்திக்க வேண்டிய குழந்தைகள் நலப் பிரச்சினையும் உள்ளது.
புட்டிப்பால் அவசியமா?
பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். தாய்ப்பால் கிடைக்காத அல்லது போதுமான அளவு கிடைக்காத சில மருத்துவச் சூழல்களில் மருத்துவரின் ஆலோசனைப்படி பவுடர் பால் வழங்க வேண்டி யிருக்கலாம்.
அப்போது பாட்டில் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகத் தோன்றினாலும் பால் புட்டி மூலம் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், பாலாடை/சங்கு பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறோம்.
பால் புட்டியின் நிப்பிள், மூடி, அடிப்பகுதி போன்ற இடங்களில் பால் துகள்கள் தங்கி, முறையாகச் சுத்தம் செய்யப்படாவிட்டால் கிருமிகள் பெருகலாம். இதனால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் ஏற்படும் ஆபத்து அதிகம். மேலும், பால் புட்டிகளில் கிருமி நீக்கம் செய்வதற்கான ஸ்டெர்லைசர் பயன்பாடும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது.
பாதிப்புகள் என்னென்ன?
பிறந்த குழந்தைக்குத் தொடக்கத்திலேயே புட்டிப் பால் கொடுத்தால், 'நிப்பிள் கன்ஃபியூஷன்' (Nipple confusion) ஏற்பட்டுத் தாய்ப்பால் குடிப்பதைத் தவிர்க்கக்கூடும். தாய்ப்பாலுக்காகக் குழந்தை தன் நாக்கு, தாடையைப் பயன்படுத்தி அதிக முயற்சி செய்து உறிஞ்ச வேண்டும்; ஆனால், புட்டியில் பால் மிக எளிதாகவும் வேகமாகவும் வரும்.