

உடற்பயிற்சி என்பது மருந்து போன்றது. ஆனால், அதன் அளவும் முறையும் மிக முக்கியம். நீங்கள் அனுபவம் வாய்ந்த விளையாட்டு வீரராகவோ, வார இறுதியில் மட்டும் உடற்பயிற்சி செய்பவ ராகவோ அல்லது இப்போதுதான் உடற்பயிற்சியைத் தொடங்கியவராகவோ இருந்தாலும், பாதுகாப்பான உடற்பயிற்சிக்கு உரிய நடைமுறைகள் அனைவருக்கும் ஒன்றே.
தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தசைநார் கிழிவு, அழுத்த எலும்பு முறிவுகள் (stress fractures), தோள் பட்டை பாதிப்புகள், தண்டுவட வட்டு நழுவுதல் (herniated discs) போன்றவற்றை அடிக்கடி காண்கிறேன்.
அதிக எடை, அதிகப்படியான பயிற்சிகள் அல்லது நீண்ட இடைவெளிக்குப் பிறகு திடீரென உடற்பயிற்சிக்குத் திரும்புவது போன்ற காரணங் களால், உடல் தாங்கக்கூடிய அளவைத் தாண்டி அழுத்தம் கொடுக்கும்போதே பெரும்பாலான காயங்கள் ஏற்படுகின்றன.
எலும்பு, தசை மண்டலம் மெதுவாகவே மாற்றங்களுக்குத் தகவமைத்துக் கொள்ளும். நாம் உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்வதற்கும், உடல் உண்மையில் தயாராக இருப்பதற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியே பெரும்பாலும் காயங்களுக்கு வழிவகுக்கிறது.