

மருத்துவ உலகம் 2025இல் கடந்து வந்த பாதைகளில் சில முக்கியமான தருணங்கள்:
இணைந்த கைகள்: பிஹாரைச் சேர்ந்த 28 வயது தொழிலாளி ஒருவர் கடந்த செப்டம்பரில் ரயில் விபத்தில் சிக்கி இரண்டு கைகளையும் இழந்தார். இரண்டு கைகளையும் இழப்பதற்குப் பதிலாக, ஒரு கையையாவது மீட்கும் நோக்கில் ‘கிராஸ் ஹாண்டு டிரான்ஸ்பிளான்டேஷன்’ எனப்படும் கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பி.ராஜேஸ்வரி தலைமையில் மருத்துவர்கள் 8 பேர் கொண்ட குழு இந்த அறுவை
சிகிச்சையை மேற்கொண்டது. சிகிச்சையின் பலனாக பிஹார் இளைஞரின் வலக்கையில் ரத்த ஓட்டம் சீராகி செயல்படத் தொடங்கியது. இந்திய அளவில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முதல் அரிய வகை கை மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும்.
மருத்துவ நோபல்: 2025இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் (அமெரிக்கா), ஷிமோன் சகாகுச்சி (ஜப்பான்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. மூவரும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர்கள். இவர்களது கண்டுபிடிப்புகள் புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி மூலம் சிகிச்சை அளிக்கும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது.
நவீன நோய்த் தடுப்பாற்றலை மாற்றியமைத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாவலர்கள், ஒழுங்குமுறை டி செல்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு, புதிய ஆராய்ச்சிக்கு இவர்கள் அடித்தளமிட்டளனர். இதற்காகவே நோபல் பரிசுக்குத் தேர்வாயினர்.
குழந்தைகள் இறப்பு: மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 20 குழந்தைகள் சிறுநீரகச் செயலிழப்பால் உயிரிழந்தனர். இந்தக் குழந்தை
களுக்கு இருமல் சிரப் மருந்தைக் கொடுத்த பிறகு சிறுநீர் வெளியேறுவது குறைந்தது. இதையடுத்து, அவர்களுக்குச் சிறுநீரகத் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. டயாலிசிஸ் கிகிச்சை தொடங்கிய சில நாள்களுக்குள் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தனர்.
உயிரிழந்த குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்வில், குழந்தைகளின் சிறுநீரகங்களில் டைஎத்திலின் கிளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டது. இது, ஒரு வகை நச்சு ரசாயனமாகும். விசாரணையில் அந்தக் குழந்தைகளுக்கு கோல்ட்ரிப், நெக்ஸ்ட்ரோ-டிஎஸ் சிரப்புகள் வழங்கப்பட்டது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாகத் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவரும் அந்த மருந்து நிறுவனம் மீது சட்ட நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.