

பல் மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைக் கும்போது முதலில் நம் மனதில் தோன்றுவது பயம்தான். இந்தப் பயத்தின் காரணமாக நம்மில் சிலர் பல் சிகிச்சை மேற்கொள்வதைத் தாமதிப்பதும் பலர் பல் சிகிச்சையை முற்றிலும் தவிர்ப்பதும் உண்டு.
பல் மருத்துவமனையில் கேட்கும் கருவிகளின் சத்தம், ஊசி, மயக்க மருந்து, இதற்கு முன் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் போன்றவை ஒன்றுசேர்ந்து பல் மருத்துவமனை சென்றாலே வலி ஏற்படும் என்கிற எண்ணத்தை மேலோங்கச் செய்து, ஒருவித இனம்புரியாத பயத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
சகஜமாகப் பேசுங்கள்
பயம் உளவியல்ரீதியாக ஏற்படக் கூடிய ஒன்று. எனவே, பயத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சில எளிய வழிகள் உள்ளன. பல் மருத்து வரிடம் சென்றதும் முதலில் உங்களின் பய உணர்வை அவரிடம் தெரியப்படுத் துங்கள்.
சிகிச்சையின்போது நீங்கள் கையை உயர்த்தினால் உங்களுக்கு இடைவெளி தேவை என்று சிகிச்சை தொடங்கும் முன்னரே தெரிவித்து விடுங்கள். இது ஒருவிதப் பாதுகாப்பை ஏற்படுத்தும்.
எந்த நேரத்திலும் தங்களால் சிகிச்சையை நிறுத்த முடியும்; சூழ்நிலை முழுவதும் நம் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்கிற உணர்வே நம்பிக் கையை அளித்துப் பயத்தைக் குறைக்க உதவும்.
அடுத்ததாக, சிகிச்சையின்போது மருத்துவரை ஒவ்வொரு கட்டத்தையும் அவ்வப்போது விளக்கிக் கூறுமாறு கேட்டுகொள்ளுங்கள். அடுத்து என்ன ஒலி அல்லது உணர்வை எதிர்பார்க்க வேண்டும் என்பதை அறிந்திருக்கும் போது நமது மூளை தேவையற்ற பயத்தை கற்பனை செய்து கொள்வது குறையும்.