

எழுத்தாளர் சுந்தர ராமசாமி சொன்ன நகைச்சுவை ஒன்று உண்டு. பேண்ட் பின்பக்கம் பாக்கெட் வைக்கலாமா, வேண்டாமா என்கிற கருத்துக் கணிப்பு ஒன்றை முழுக்க முழுக்க பிக்பாக்கெட்காரர் களிடம் நடத்தினால் முடிவு என்னவாக இருக்கும் என எல்லாருக்குமே தெரியும்.
டிரிஸ்டன் ஹேரிஸ் என்கிற கணினி மென்பொருள் வல்லுநர் கூற்றின்படி திறன்பேசிகள், அவற்றின் செயலிகள், சமூக ஊடகங்கள் போன்றவற்றை வடிவமைப்ப வர்கள் எல்லாரும் நம் நேரத்தைக் களவாட நினைப்பவர்கள்.
மிகப் பெரிய மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். அவர்களது மின்னஞ்சல் சேவை போன்ற வற்றை 24 மணி நேரமும் மக்களை எப்படிப் பயன்படுத்த வைப்பது என்பதையே நோக்கமாக வைத்திருக்கின்றன என்பது குறித்துப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டிவிட்டு, அதிலிருந்து வெளியேறி மனிதாபிமான முள்ள தொழில்நுட்ப மையம் (Center for Humane Technology) என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்.
கஞ்சத்தனம்
இவரைப் போலவே பல்வேறு சமூக ஊடகங் களில் பணியாற்றியவர்கள் திறன்பேசிகள், சமூக வலைத்தளங்களால் ஏற்படும் பல்வேறு பாதிப்பு களை விளக்கி ‘The Social Dilemma’ (சமூகக் குழப்பநிலை) என்கிற ஓர் ஆவணப்படத்தை 2020இல் வெளியிட்டனர். அது மிகவும் பரவ லான கவனத்தைப் பெற்றது. நாம் பல்வேறு கட்டுரைகளில் அலசிய விஷயங்கள்தான், அவை குறிப்பிட்ட எல்லாமே.
குறிப்பாகச் சூதாட்டம் போல் மீண்டும் மீண்டும் நம்மைச் சிக்க வைக்கின்றன என்பதுதான் அவற்றின் அடிநாதம். 1975இல் மைக்ரோசாஃப்ட், 1998இல் கூகுள், 2004இல் ஃபேஸ்புக், 2007 முதல் ஐபோன் என வரிசையாக ஒவ்வொன்றும் அறிமுகம் ஆகும் போது அவற்றைக் கண்டுபிடித்தவர்களே, அவை இவ்வளவு பிரபலமாகும் என அறிந்திருக்க மாட்டார்கள்.