

எனக்கு வயது 48. நீரிழிவு இருக்கிறது. தோல் தடிப்பு, அரிப்பு பிரச்சினைகள் கடந்த சில ஆண்டுகளாக இருக்கின்றன. மாத்திரை சாப்பிட்டு, களிம்பு தடவி வந்தால் சரியாகிறது. பிறகு மீண்டும் வருகிறது. இப்படியே இருந்தால் புற்றுநோய் வரும் என்று சிலர் பயமுறுத்துகிறார்கள். தோல் நோயை எப்படிக் குணப்படுத்துவது?- எஸ். பிரேம்குமார், தஞ்சாவூர்
இதற்குப் பதிலளிக்கிறார், மருத்துவப் பேராசிரியர் டாக்டர் சு. முத்து செல்லக் குமார்.
நீரிழிவு இருக்கிறது என்று தெரிவித்துள்ளீர்கள். அது கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று சொல்லவில்லை. ஏனெனில், கட்டுப்பாடில்லா நீரிழிவு இதயம், சிறுநீரகம், நரம்பு, கண் மட்டுமல்ல தோலையும் குத்தகைக்கு எடுத்துவிடும். ஒருவருக்குத் தோல் தடிப்பு, அரிப்பு ஏற்படுவதற்கு ஒவ்வாமை, பூஞ்சைத் தொற்றுகள், 'எக்ஸிமா', 'சொரியாசிஸ்' போன்ற நாள்பட்ட தோல் பிரச்சினைகள், சின்னம்மை, தட்டம்மை, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள், பூச்சிக் கடிகள், கல்லீரல் நோய்கள், தைராய்டு பிரச்சினைகள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன.