

சாத்தான்குளம் ஜெயராஜ்-பெனிக்ஸ் தந்தை, மகன் கொலை வழக்கின் மீதான தீர்ப்பு, பர பரப்பை ஏற்படுத் தியிருக்கிறது. இந்த நிகழ்வுக்கான காரணத்தை ஒரே வார்த்தையில் சொல்வதாக இருந்தால் ‘அதிகார துஷ்பிரயோகம், வரம்புமீறல்’ என்று சொல்லலாம்.
இது தனிநபரின் ஆளுமைத்தன்மையையும், மனநிலை யையும் சார்ந்தது. அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஒருவரின் மனநலம் மிக முக்கியக் காரணி.
இடப்பெயர்ச்சி மனப்பான்மை
மேலிட அழுத்தங்களுக்கு அடி பணிய வேண்டிய கட்டாயத்தால் மன உளைச்சலுக்கு ஆளாவோர், தங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் மேல் அந்த உளைச்சலை அதிகார துஷ்பிரயோகமாக வெளிப்படுத்துவது எல்லா நிலைகளிலும் பரவலாக நடைபெற்றுவருகிறது.
ஒருவரை பணிசெய்ய நிர்பந்திப்பதற்கும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்து வதற்குமான இடைவெளி மிக மெல்லியதாக இருப்பதால், இந்த வரம்பு எப்போது மீறப்படுகிறது என்பதே சிலவேளைகளில் தெரியாமல் போய்விட வாய்ப்பு உண்டு.
பெரும்பாலான பணியிடங்களில் இந்த அழுத்தங்கள் இடம்மாற்றி செயல்படுத்தப்படுவதுதான் (Diplacement) உளவியல்ரீதியான முக்கிய காரணம். ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளரால் கடிந்துகொள்ளப் படும் காவல் துணை ஆய்வாளருக்கு, அந்த உளைச்சலை இடமாற்றக் கிடைக்கும் எதிர்ப்பற்ற நபர் சாதாரண காவலர்தான்.
இந்த உளைச்சலுக்குத் தாக்குபிடிக்க முடியாத காவலர், அதைத் தன் குடும்ப உறுப்பினர் மீதோ மக்கள் மீதோ வெளிப்படுத்தும்போதுதான் அத்துமீறல்கள் ஏற்படுகின்றன. மருத்துவராகவோ, குடிமைப்பணி அதிகாரியாகவோ முயற்சி செய்து தோல்வியடைந்த பெற்றோர், நிறை வேறாத தங்கள் கனவைப் பிள்ளைகள் மீது திணித்து அதை அடைய முயற்சி செய்வதும் இந்த இடமாற்ற வகைதான்.
இது அந்தப் பிள்ளைகளின் விருப்பம், திறனுக்கு அப்பாற்பட்ட திணிப்பாக இருக்கும்போது, பிள்ளைகள் அந்த வெறுப்பை தன் மீதான தாக்குதலாகவோ அல்லது பிறர் மீதான தாக்குதலாகவோ வெளிப்படுத்துவதுதான் தற்கொலை முயற்சிகளுக்கும், சமூகவிரோத செயல்பாடு களுக்கும் ஓர் காரணமாக மாறுகிறது. இதுவும் ஒரு வகையில் அதிகார துஷ்பிரயோகத்தின் வெளிப்பாடு தான்.
நார்சிசிச ஆளுமைக்கோளாறு
நார்சிசிசம் (Narcissism) என்பதற்கு தன்னைத்தானே காதலிப்பது என்று அர்த்தம். தன்னைத்தான் விரும்பாத நபர் எவருமில்லை. ஆனால், இது ஆளுமைக்கோளாறாக உருவெடுக்கும்போது, இவர்கள் கையில் சிக்குபவர்களின் நிலைமை பரிதாபத்துக்கு உரியதாகிவிடுகிறது.