

மூட்டு வலியும் தோள்பட்டை வலியும் மூப்பின் அடையாளமா? சர்க்கரை நோய் விடுக்கும் அமைதியான எச்சரிக்கையாகவும் இருக்கலாம். “வயதாகிவிட்டது, அதனால் முட்டி வலிக்கிறது”, “எலும்பு தேய்ந்து விட்டது.
அதனால் கையைத்தூக்க முடியவில்லை”, “இந்த வயதில் இதெல்லாம் சகஜம்.” இப்படிப் பலரும் மூட்டு, தசை வலியை இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால், மருத்துவ அறிவியல் சொல்லும் உண்மை வேறு பட்டது. ஒவ்வொரு மூட்டு வலியும் வயதின் காரணமாக மட்டுமே ஏற்படுவதில்லை. சில நேரம், உடலுக்குள் நீண்டகாலமாக நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதில் முக்கியமான ஒன்று, நீரிழிவு நோய்.
நீரிழிவு என்பது ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது மட்டுமல்ல. நீண்ட காலமாகச் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது உடலின் பல்வேறு திசுக்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும்.
குறிப்பாக கொலாஜன் (Collagen) போன்ற கட்டமைப்புப் புரதங்களில் ஏற்படும் சர்க்கரை இணைவு (Glycation), திசுக்களின் நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கக்கூடும். இதனால் தசைநார்கள், மூட்டு உறைகள், பிற இணைப்புத் திசுக்களில் இறுக்கமும் இயக்கக் குறைவும் ஏற்படச் சாத்தியம் உண்டு. எனவே, “மூட்டு வலிக்கிறது, பிரச்சினை மூட்டில் மட்டும்தானா?” என்கிற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை மணி
“கையை மேலே தூக்க முடிய வில்லை”, “சட்டை அணிவதற்குக் கஷ்டமாக இருக்கிறது”, “தலையை வார முடியவில்லை”, “முதுகுக்குப் பின்னால் கையைக் கொண்டு செல்ல முடியவில்லை” என்பது போன்ற அறிகுறிகள் வெறும் வயது மாற்றமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.