

ட்ரைஜெமினல் நியூரால்ஜியா எனும் பாதிப்பு தமிழில் முக்கிளை நரம்பு வலி எனப்படுகிறது. அதாவது, முக நரம்புகளில் ஏற்படும் வலி. இந்த ட்ரைஜெமினல் நியூரால்ஜியா பாதிப்பு பெரும்பாலும் சாதாரண முக வலியாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், இது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.
அண்மையில் ஒரு 40 வயதுப் பெண்ணுக்கு நான் சிகிச்சை அளித்தேன். அவருக்கு இந்தப் பாதிப்பு எந்தவித அறிகுறியும் இன்றித் தொடங்கி, அது படிப் படியாகக் கட்டுப்படுத்த முடியாத அசெளகரியமாக மாறியுள்ளது. குறிப்பாக, முகத்தின் ஒரு பக்கத்தில் விட்டுவிட்டு வரும் ஒருவித அசௌகரிம், பின்னர் திடீரென மின்சார அதிர்ச்சி போன்ற வலியை அது ஏற்படுத்தியது என்று கூறினார்.
அந்த வலியால் மெல்லுவது, பேசுவது, புன்னகைப்பது, அழுவது அல்லது முகத்தைக் கழுவுவது போன்ற இயல்பான செயல்கள்கூடச் சவாலாக மாறிவிடும். முகத்தில் ஏற்படக்கூடிய இந்த வலி, கணிக்கமுடியாததாகவும், தாங்க முடியாததாகவும் இருக்கும். இது நோயாளியை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.
வலி நிவாரணிகளால் பயனில்லை: அந்தப் பெண்ணின் மருத்துவர் அவருக்கு வழக்கமான வலி நிவாரண மருந்துகளைப் பரிந்து ரைத்தார், ஆனால், அவை எந்த நிவாரணத்தையும் அளிக்கவில்லை. அந்த வலி மீண்டும் மீண்டும் வந்துள்ளது. வலியின் தீவிரமும் அதிகரித்துள்ளது. காலப்போக்கில், உணவுப் பழக்கம், பேசும் விதம், சமூக நிகழ்வுகளில் நம்பிக்கையுடன் பங்கேற்க முடியுமா என்கிற அச்சமும் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.
இறுதியாக, ட்ரைஜெமினல் நியூரால்ஜியா நோய்க்குத் தீர்வாக அறுவைசிகிச்சைப் பரிந்துரைக்கப் பட்டது. 40 வயதான அவருக்கு, அறுவைசிகிச்சை, அதனுடன் தொடர் புடைய அபாயங்கள் பற்றிய எண்ணம் அச்சமூட்டுவதாக இருந்துள்ளது.