

எபோலா வைரஸ் 1976 முதல் 2025 வரை 17 ஆயிரம் மனித உயிர்களைப் பறித்திருக்கிறது. 2014இல் எபோலா தாக்கியபோது ஒவ்வொரு நாடும் விழித்துக் கொண்டது. உலக சுகாதார நிறுவனம் (WHO) எபோலாவை அதிதீவிர வைரஸாக வகைப்படுத்தியுள்ளது.
1976இல் காங்கோ நாட்டிலுள்ள ‘யாம்புகு’ (Yambuku) என்கிற பகுதியிலுள்ள ‘எபோலா’ ஆற்றங்கரையோரப் பகுதிகளில்தான் இந்நோய்க் கிருமிகள் மனிதர்களைத் தாக்கத் தொடங்கின.
அதனால்தான் இதற்கு ‘எபோலா’ என்று பெயர். அப்போது காங்கோ, சூடான் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் மாண்டனர். இதன் தாக்குதல்கள் தொடர்கதையாகி, 2014இல் உச்சத்தை அடைந்தது. தற்போது மீண்டும் இதன் தாக்கம் தொடங்கியுள்ளது.
அறிகுறிகள் என்ன?
இந்த வைரஸ் மனிதர்களுக்கும், குரங்குள், வாலில்லாக் குரங்குகளை உள்ளடக்கிய பேரினத்தைச் சார்ந்த உயிரினங்களைத் தாக்கி ‘எபோலா வைரஸ் நோய்’ அல்லது ‘எபோலா ரத்த கசிவுக் காய்ச்சல்’ நோயை உருவாக்குகிறது.
உடலுக்குள் வைரஸ் கிருமி சென்ற இரண்டாவது நாளிலிருந்து மூன்று வாரத்துக்குள் அறிகுறிகள் தெரியவரும். விரைவான காய்ச்சல், தொண்டைப்புண், உடல்வலி, தலைவலியுடன் ஆரம்பமாகும் நோயானது, பிறகு தலைச் சுற்றல், வாந்திபேதியை உரு வாக்கி கல்லீரல், சிறுநீரகத்தின் செயல்பாடுகளை முடக்கும்.
கண், மூக்கு, காது, தோல், குதம் வழியாக ரத்தம் வடிந்தும், ரத்த வாந்தி எடுத்தும் நோயாளிகள் இறக்கின்றனர். இது உடலின் அனைத்து உள்ளுறுப்புகளையும் சிதைத்து 7 முதல் 16 நாள்களில் மரணத்தை ஏற்படுத்தும்.
நோய் அறிகுறிகள் டெங்கு, மலேரியா போன்று ஆரம்பித்தாலும், பிறகு மாறுபட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும். எபோலா வைரஸ் நோயை உருவாக்கும் ஐந்து வகையான வைரஸ் களில் நான்கு வைரஸ்கள் மனிதர்களைத் தாக்கு கின்றன.