

விளையாட்டு வினையானது என்பார்கள். அது இணையத்துக்கு அடிமையாகும் (Internet addiction) பாதிப்புக்கு மிகவும் பொருந்தும். அமெரிக்காவின் மனநல மருத்துவரான இவான் கோல்ட்பெர்க், 1995இல் விளையாட்டுக்காக ஒன்றைச் செய்தார்.
அது பின்னாளில் நிஜமானது. அது என்ன? அமெரிக்க மனநல மருத்துவக் கழகம் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களுக்கான (Addiction) அறிகுறிகளை வெளியிட்டு, அதைக் கண்டறியும் வழிமுறைகளையும் (Criteria) வெளியிட்டது. இதை ‘DSM’ (Diagnostic and Statistical Manual) என்பார்கள். ஏற்கெனவே நாம் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கான பல அறிகுறிகளைப் பார்த்தோம்.
அதன்படி ஒருவர் அதிக நேரம் போதைப் பொருளை அடைவதிலேயே செலவழிப்பது (Craving), எடுக்கும் அளவு அதிகமாகிக்கொண்டே இருப்பது (Tolerance), எடுக்காவிட்டால் நடுக்கம், பதற்றம் போன்றவை ஏற்படுவது (Withdrawal), போதைப் பொருளால் முக்கிய வேலைகள் கெடுவது, பாதிப்புகள் இருக்கின்றன எனத் தெரிந்தும் பயன்படுத்துவது (abuse), கட்டுப்படுத்த முடியாத அளவு பயன்படுத்துவது போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார் என்று அர்த்தம். இவற்றைக் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். இதன் பின்னால் இருக்கும் மூளை நரம்பியல் மாற்றங்களையும் பார்த்தோம்.
இணைய அடிமை டெஸ்ட்:
மீண்டும் விளையாட்டு உண்மையான கதைக்கு வருவோம். திரைப்படங்களை எல்லாம் கிண்டல் செய்தே சில திரைப் படங்கள் எடுக்கப்படுகின்றன. இவை ஸ்பூஃப் (Spoof) வகை. இவற்றில் நகைச்சுவைக்காகப் பல விஷயங்கள் மிகைப்படுத்திக் காட்டப்படும். ‘தமிழ்ப்படம்’ என்கிற பெயரில் வந்த ஒரு தமிழ்ப் படம் ஓர் எடுத்துக்காட்டு.
அதுபோல் இணையதளங்களை அதீதமாகப் பயன்படுத்து வதைப் பற்றி நகைச்சுவையாக மிகைப்படுத்தி, அதனைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதுடன் ஒப்பிட்டு, கோல்ட்பர்க் என்னும் மனநல மருத்துவர் ‘இணையத்துக்கு அடிமை யாகும் பாதிப்பு’ (Internet addiction disorder) என்று ஒரு பதிவை எழுதினார்.