

தமிழகத்தில் கார்காலம் தொடங்கிவிட்டால் காய்ச்சல் காலமும் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். காய்ச்சலை ஒட்டி நம்மிடையே பல கற்பிதங்கள் நிலவுகின்றன. முதலில், காய்ச்சல் என்பது ஒரு நோயன்று. அது அறிகுறி மட்டுமே. உடலுக்குள் ஏற்பட்டுள்ள தொற்று (Infection) அல்லது அழற்சியைக் (Inflammation) குறிக்கும் நிலை.
இவ்விரண்டிலும் காய்ச்சல் என்பது உடலின் தற்காப்பு நடவடிக்கையாக வெளிப்படும் அறிகுறி. காய்ச்சல் என்றவுடனே அதை உடனே குணப்படுத்தியாக வேண்டும் என்றில்லாமல் காய்ச்சல் ஏன் வந்தது, எந்தத் தொற்றால் வந்தது என்று அறிய முனைவது நல்லது.
காய்ச்சல் வகைகள்
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கும் நேரத்தில் பருவகால வைரஸ் காய்ச்சல்கள் அதிகமாகப் பரவும். ஃபுளூ என்றழைக்கப்படும் இன்ஃபுளூயன்சா, ரெஸ்பிரேட்டரி சின்சிஷுல் வைரஸ்கள், கரோனா திரிபுகள் போன்றவை சுவாசப் பாதை வழியாக எளிதில் பிறருக்குத் தொற்றிக்கொள்ளும்.
சளி, தொண்டை வலி, இருமல் உள்ளிட்டவற்றை அடக்கிய ஃபுளூ காய்ச்சல் ஒருபுறம் என்றால், ஏடிஸ் கொசுக்கடியால் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றொரு புறம்.
இவையன்றி, ‘டிக் மைட்’ என்கிற உண்ணி கடித்து அதன் வழியாக Orientia tsutsugamushi எனும் பாக்டீரியா தொற்றுப் பரவி ஏற்படும் ஸ்கிரப் டைஃபஸ் எனப்படும் ‘உண்ணிக் காய்ச்சல்’ எனப் பலவகை தொற்றுகளி லும் காய்ச்சல் ஒரு முக்கிய அறிகுறி.
காய்ச்சல் வந்தால் உடனே மருந்தகங் களுக்குச் சென்று ஆன்டிபயாடிக், ஸ்டீராய்டு மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதும் உடனே நிவாரண ஊசிகளைச் செலுத்திக்கொள்வதும் அடிப்படை நோய் நிலையிலிருந்து பாதுகாப்பு தராது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பாதிப்புகள்
ஃபுளூ காய்ச்சலைப் பலரும் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் என்று கடந்து சென்றாலும் முதியோர், குழந்தைகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர் ஆகியோருக்கு நிமோனியா எனும் கடுமையான நுரையீரல் நோய் நிலையை உண்டாக்கவல்லது.
டெங்குவில் முதல் மூன்று நாள்கள் கடுமையான காய்ச்சல் இருக்கும். அதற்கடுத்த நாள்களில் உடல் முழுவதும் சில்லெனக் குளிர்ந்து விடும். டெங்குவில் கடுமையான காய்ச்சல் ஓய்ந்த பின்னரே ஆபத்தான நிலை ஏற்படுகிறது. இதை ‘Critical phase’ என்கிறோம்.