

உலக நீரிழிவு நோய் நாளின் ஒரு பகுதியாக, பெரியவர்களுக்கு ஏற்படும் முதல் வகை நீரிழிவு நோய்க்கான வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நீரிழிவு நோய் (டயாபடீஸ் மெலிட்டஸ் - Diabetes Mellitus). என்பது நீண்ட காலத்துக்கு நாள்பட்ட நோயாக இருக்கக்கூடியது. இது கணையம் போதிய அளவு இன்சுலினைச் சுரக்காதபோது அல்லது சுரக்கும் இன்சுலினையும் உடல் சிறந்த முறையில் பயன்படுத்தாதபோது ஏற்படுகிறது.
இதனால் ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகரிக்கும். அது உயர் ரத்தச் சர்க்கரை நிலைக்குக் கொண்டுசெல்லும். மிகக் குறைவான இன்சுலின் சுரப்பால் முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது நாள்பட்ட நோயாகும்.
இதில் கணையம் மிகக் குறைந்த அளவு இன்சுலினைச் சுரக்கும் அல்லது சுத்தமாகவே சுரக்காமலும் போகலாம். இரண்டாம் வகை நீரிழிவு நோய் என்பது உடலால் இன்சுலினைத் திறம்படப் பயன்படுத்த முடியாமல் போகும்போது ஏற்படுவது. இது அதிகப்படியான உடல் எடை, உடல் உழைப்பு இல்லாதபோது ஏற்படும்.
உடல் இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைப் பெறும்போதும் போதிய அளவு இன்சுலினைச் சுரக்காதபோதும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது.