

சில மருத்துவர்கள் காலம் கடந்தும் மருத்துவ உலகில் நினைவுக்கூரப்படுவர். கே.வி.டி. என்றழைக்கப்படும் மருத்துவர் கே.வி.திருவேங்கடத்துக்கு அந்த வரிசையில் எப்போதும் இடம் உண்டு.
ஒவ்வாமை, சிக்குன்குனியா போன்ற பிரச்சினைகளுக்கு இவர் கண்டறிந்த சிகிச்சை முறையைத்தான் இன்றும் பல மருத்துவர்கள் பின்பற்றுகின்றனர். புகழ்பெற்ற மருத்துவர், மனிதாபிமானி, மருத்துவப் பேராசிரியரான கே.வி.திருவேங்கடத்துக்கு இது நூற்றாண்டு.
1926 அக்டோபர் 11இல் பிறந்த திருவேங்கடம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 1950இல் பட்டம் பெற்றவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் 31 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றியிருக்கிறார். நெஞ்சக (நுரையீரல்) மருத்துவத் துறையில் நிபுணராக விளங்கிய திருவேங்கடம் ஒவ்வாமை, தொற்றுநோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் கைதேர்ந்தவராக இருந்தார்.