

சுழல்வது போன்ற உணர்வுடன், குமட்டல், வாந்தி போன்றவை உடலின் சமநிலை இழப்புப் பிரச்சினையால் ஏற்படுகின்றன. இதை வெர்டிகோ என்பார்கள். பொதுவாக மயக்கம், வெர்டிகோ இரண்டுமே ஒன்றாகக் கருதப்பட்டாலும் இரண்டுமே வேறு வேறு! மயக்கத்தில் உடல் சோர்வடைந்து, பார்வை மங்கி, உடல் தளர்ந்து நிலைகுலையும்.
உடல் சுழலும் உணர்வு இருக்காது. மயக்கம் மூளைக்குச் செல்லும் ரத்தஓட்டக் குறைவால் ஏற்படும். மயக்கம் பெரும்பாலும் ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் குறைதல் போன்ற காரணங்களால் ஏற்படும்.
சுயக் கட்டுப்பாடு இல்லாமல் சுழல்வது போன்ற உணர்வு. குமட்டல், வாந்தி, காதில் இரைச்சல், உடல் சமநிலையை இழத்தல், தடுமாற்றம் இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் அது வெர்டிகோதான். சமநிலை சமிக்ஞைகள் மாறுபடுவதால் வெர்டிகோ ஏற்படும்.
உள்காதுப் பிரச்சினைகள், நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஆகியவற்றாலும் வெர்டிகோ ஏற்படும். சுருக்கமாக, 'சமநிலை உணர்வைப் பராமரிக்க' உதவும் உறுப்புகளின் பாதிப்புகளால் இது ஏற்படுகிறது.