

மகனுக்கு வயது 11. தினமும் மலம் கழித்தாலும், அது கடினமாகவே வருகிறது. இது மலச்சிக்கல் பிரச்சினையா? அறிவுரை வழங்கவும். - கா.ஹேமா, திருச்சி
நாள்தோறும் மலம் கழித்தாலும், அது கடினமாக இருப்பதால் இது கவனிக்கப்பட வேண்டும். 11 வயதான சிறுவனுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உளவியல் தொடர்பான காரணங்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுமார் 85 - 95% சிறுவர்களுக்கு இதுதான் முக்கியக் காரணம்.
மீதமுள்ள சிறுவர்கள்தான் உடல், குடல் பிரச்சினைகளால் மலச்சிக்கலுக்கு ஆட்படுகிறார்கள். சிறுவர்களின் வாழ்க்கை இன்று வெகுவாக மாறிவிட்டது.
மாறிப் போன வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் இவர்களிடம் மலச்சிக்கலை ஏற்படுத்து கின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தையின் உணவுப் பழக்கத்தைச் சரிவரக் கவனிக்க முடியாமை தொடர்கிறது.
நார்ச்சத்து இல்லாத பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், சக்கை உணவு, மைதா, துரித உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வது, குறைவாக நீர் அருந்துவது மலத்தைக் கடினமாக்குகிறது.
பள்ளி, தேர்வு மன அழுத்தம், பள்ளி கழிப்பறைகளைப் பயன்படுத்த முடியாமல் அல்லது முன்பு மலம் கழித்தபோது வலி ஏற்பட்ட பயத்தில் மலத்தை அடக்கி வைப்பது, உடற்பயிற்சி இல்லாமல் நீண்ட நேரம் அமர்ந்து திறன்பேசியில் மூழ்கி விடுதல் ஆகிய அனைத்துமே சிறுவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படக் காரணமாக இருக்கின்றன.