

எனக்கு 60 வயது. ஆர்த்ரைட்டிஸ் மூட்டுவலியால் அவதிப்படுகிறேன். மூட்டுப் பகுதியில் ஊசி செலுத்தினால் வலி குறையும் என்று எலும்பு மருத்துவர் பரிந்துரைத்தார். அறுவைசிகிச்சை இன்றி ஊசி மட்டுமே செலுத்தி வலியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியுமா? - பா.பத்மாவதி, தாம்பரம்.
உங்களின் மூட்டுவலிக்கு முக்கியக் காரணம் ‘ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்’ (Osteoarthritis). முதுமை பொல்லாதது. அது ஒவ்வோர் உறுப்புக்கும் ஏதாவது கொடுத்து விட்டுப் போகும். மூட்டுகளுக்கு அது போட நினைத்த பூட்டுதான் இந்த முதுமை மூட்டு அழற்சி. அதாவது, ‘மூட்டுச் சிதைவு நோய்’.
மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு வயதாகும்போது தேய்ந்து, எலும்புகள் ஒன்றோடு மற்றொன்று உரசுவதால் அழற்சியாகி, அது மூட்டு இயக்கத்தையும் குறைத்துவிடும். இதனால் மூட்டுகளில் வலி, வீக்கம், விறைப்பு ஏற்படும். முழங்கால் பெரிதும் பாதிக்கப்படும். பெண்களுக்கு இந்த ஆர்த்ரைட்டிஸ் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
உங்கள் மூட்டு நிலையைக் கண்டறிந்த பிறகுதான் எந்த வகை சிகிச்சை கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்க முடியும். மேலும், உங்களுடைய மூட்டு அழற்சிக்கான ஆபத்துக் காரணிகளும் அறியப்பட வேண்டும்.