

எனக்கு வயது 53. இதயத்தில் 3 ஸ்டென்ட்கள் வைத்து 3 ஆண்டுகள் ஆகின்றன. நீரிழிவு, ரத்த அழுத்தம் இரண்டும் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது வருடாந்திர ஆஞ்சியோ பரிசோதனையில் ஒரு ஸ்டென்டில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்தது. ஸ்டென்டில் இப்படி அடைப்பு ஏற்படுமா? - துரை. பாபு, கோவை
இதற்குப் பதிலளிக்கிறார் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் சு. முத்து செல்லக் குமார். ஏற்படலாம். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகு அங்கு பொருத்தப்பட்ட ஒரு ஸ்டென்டில் அடைப்பு ஏற்படுவதற்கும் மற்றவை நல்ல நிலையில் இருப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில், அடைப்பு ஏற்பட்ட எல்லா இதய ரத்த நாளங்களின் அமைப்பும் அதன் அடைப்பும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
ஸ்டென்ட் பொருத்தப்பட்ட ரத்த நாளத்தின் தன்மை, அதன் உடற்கூறியல், ரத்த ஓட்ட நிலைமைகள் அடைப்பின் அளவு, அதில் ஏற்பட்ட கால்சியம் படிவு நிலை போன்ற காரணங்களைப் பொறுத்து மீண்டும் அதில் அடைப்பு ஏற்படும் சாத்தியம் மாறுபடலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சிகிச்சை முறைகள், பொருத்தப் பட்ட ஸ்டென்ட் வகை, அதன் அம்சங்கள் போன்றவற்றைச் சார்ந்தும் இது அமையலாம்.