அலோபதி மருந்துகளில் மட்டுமா வேதிப்பொருள்? | மறையாத கட்டுக்கதைகள் 15

அலோபதி மருந்துகளில் மட்டுமா வேதிப்பொருள்? | மறையாத கட்டுக்கதைகள் 15
Updated on
3 min read

தற்காலத்தில் நவீன மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருந்துகள் அனைத்தும் வேதிப்பொருள்கள் (Chemical), உடலுக்குத் தீங்கானவை என்கிற எண்ணம் மக்களிடையே உள்ளது. இவற்றை உட்கொள்வது நல்ல தல்ல என்கிற வாதம் வலுப்பெற்று வருவதைக் காண முடிகிறது.

அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டு சிகிச்சை பலன் அளிக்கக்கூடிய மருந்துகளை ‘வேதிப்பொருள்கள்’ என்று தவறாக எண்ணிக்கொண்டு அவற்றைப் புறக் கணிக்கும் போக்கு அதிகரிப்பது தவறு.

கீமோஃபோபியா

அறிவியல்பூர்வமான ஆதாரமற்ற தகவல்களை அப்படியே நம்பி, நவீன மருந்துகளில் வேதிப் பொருள்கள் உள்ளன என்று அஞ்சிப் புறக் கணிப்பதற்கு ‘கீமோஃபோபியா’ என்று பெயர்.

அலோபதி - நவீன மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர், முக்கியமான பிரச்சினைக்கு உயிர்காக்கும் மருந்தைப் பரிந்துரைக்கும் போதும் அந்த மருந்து ‘வேதிப்பொருள்’ என்றும் ‘தொழிற்சாலை’ களில் உருவானது என்றும் கூறி அவற்றை உண்ணாமல், இயற்கை மருத்துவ பொருள்களை மட்டும் உட்கொள்வேன் என்று சொல்பவர்கள் ‘கீமோஃபோபிக்’ என்று அழைக்கப் படுகிறார்கள்.

‘கீமோ’ என்றால் வேதிப்பொருள். ‘ஃபோபிக்’ என்றால் அஞ்சுவது. அவர்கள் உணர வேண்டிய உண்மை யாதெனில், இவ்வுலகில் மருந்து என்று தரப்படும் ஒவ்வொரு பொருளும் அது மூலிகையோ, இயற்கையில் கிடைக்கும் பொருளோ, விலங்கி லிருந்து கிடைக்கும் மருந்தோ - இவை அனைத்திலும் முக்கியமாகச் செயல்படும் மருந்தியல் கூறு (Active Pharmaceutical Entity) என்கிற ஒன்று இருக்கும். அந்தக் குறிப்பிட்ட கூறு, ஒரு வேதிப்பொருளே.

எடுத்துக்காட்டாக, மலேரியாவுக்கு மருந்தாக சீனப் பாரம்பரிய சிகிச்சை முறையில் இருந்து ஆர்டிமிசினின் வழக்கத்துக்கு வந்தது. இது ஆர்டி மிசியா ஆனுவா எனும் மூலிகையில் இருந்து கிடைத்தாலும், அதற்கு எனக் குறிப்பிட்ட வேதிக் கூறு உண்டு. அவ்வளவு ஏன், நாம் உண்ணும் மாவுச்சத்து, கொழுப்பு, புரதம் என அனைத்துக்கும் வேதிக் கூறுகள் உண்டு.

இவை அனைத்துமே உடலுக்குள் சென்று வினை புரியும் உயிர் வேதியியல் வேதிப் பொருள்களே (Active Biochemical Principles). ‘கீமோஃபோபியா'வின் பாதிப்பில், தனக்குத் தீமை செய்துவிடும் என்று அஞ்சி ஒதுக்கும் நவீன சிகிச்சை மருந்துகள் யாவும் பல்வேறு கட்டப் படிநிலை, சோதனைகளைக் கடந்தே மக்களிடம் வந்துசேர்கின்றன.

பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகும், குறிப் பிட்ட மக்களுக்குப் பரிசோதனை முயற்சியாக வழங்கப்பட்டு, அந்த மருந்தின் பாதுகாப்பு, குணமளிக்கும் தன்மை (Safety & Efficacy) உறுதி யளிக்கப்பட்ட பிறகே சந்தைக்கு வருகின்றன.

போலி மருந்துகள்

நீரிழிவு நோயை முற்றிலுமாக இல்லாமல் செய்வோம் என்று பொய்யாகச் சூளுரைத்து விற்கப்படும் பொடிகளை மக்கள் நம்புகிறார்கள். உண்மையில், அலோபதி - நவீன அறி வியல் மருத்துவத்தால் குணமாக்க முடியாது என்று கூறப்படும் நோய்களை, முற்றிலும் குணமாக்கலாம் என்று கூறி விற்கப்படும் மருந்துகளில் பெரும்பாலானவை போலி. அவற்றில் இருக்கும் மருந்தியல் கூறுகள் முறையான ஆய்வுக்கோ ஆராய்ச் சிக்கோ பரிசோதனைக்கோ உட் படுத்தப்படாதவை என்பதை மக்கள் உணர வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in